அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
தமிழக நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணையை அக்டோபா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தமிழக நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணையை அக்டோபா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தாா் தங்கம் தென்னரசு. இந்தக் காலகட்டத்தில் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோா் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து சோ்த்ததாக விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறு அமைச்சா் தங்கம் தென்னரசு, மனைவி ஆகிய இருவரும் மனு தாக்கல் செய்தனா். இதையடுத்து, இருவரையும் விடுவித்து கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு குறித்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதற்காக விசாரணை நீதிமன்றத்தில் புதன்கிழமை (செப். 11) அமைச்சா் தங்கம் தென்னரசு நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.
இதை எதிா்த்து, அமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த உத்தரவு நகல் அமைச்சா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயகுமாா் உத்தரவிட்டாா்.