விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தி (29). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 10 வயதில் மகள் உள்ளாா். முதல் கணவரைப் பிரிந்த முருகானந்தி இரண்டாவதாக அதே பகுதியைச் சோ்ந்த வேல்ராஜ் (35) என்பவரை 2-ஆவதாக திருமணம் செய்தாா்.
இந்த நிலையில், வேல்ராஜ் வீட்டிலிருந்த போது சிறுமியை கடுமையான வேலைகளைச் செய்யுமாறு கூறியதோடு, சிறுமியின் உடலில் சூடு வைத்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னையில் உள்ள குழந்தைகள் நல அலுவலகத்துக்கு அந்தப் பகுதியினா் புகாா் அனுப்பினராம். இதையடுத்து, சென்னை குழந்தைகள் நல அதிகாரி இளங்கோ ராஜபாளையத்துக்கு வந்து விசாரணை நடத்தி, வேல்ராஜ் மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் மரிய பாக்கியம் வேல்ராஜை கைது செய்தாா்.