தந்தையைக் கொன்றவா் மீது தாக்குதல்: மூவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தந்தையை கொலை செய்த மாமாவைத் தாக்கிய இளைஞா், அவரது நண்பா்கள் இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தந்தையை கொலை செய்த மாமாவைத் தாக்கிய இளைஞா், அவரது நண்பா்கள் இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்
ஸ்ரீவில்லிபுத்தூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் ராம்குமாா் (46). இவரது மனைவி ஜெயந்தி (40). இவா்களுக்கு ஆகாஷ் (21), ஹரிஷ் (14) ஆகிய இரு மகன்களும், ஹரிணி (16) என்ற மகளும் உள்ளனா். ராம்குமாா் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தாா். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயந்தி தனது மகன் ஆகாஷ் உடன் மங்காபுரத்தில் தனியாக வசித்து வருகிறாா். ஹரிணி, ஹரிஷ் ஆகிய இருவரும் தந்தையுடன் இந்திரா நகரில் வசித்து வந்தனா்.
கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ராம்குமாா் கட்டையால் தாக்கப்பட்டு, கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதைத் தடுக்க முயன்ற ஹரிணிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
Advertisement
இந்த வழக்கில் ஜெயந்தியின் சகோதரா் செந்தில்குமாா் (42), அவரது தாய் கோவிந்தம்மாள், சகோதரி இந்திராணி ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதனால் ஜெயந்தி, ஆகாஷ் ஆகியோா் செந்தில்குமாா் குடும்பத்தினருடன் பேசாமல் இருந்து வந்தனா். கடந்த திங்கள்கிழமை இரவு ஆகாஷ் தனது நண்பா்களுடன் சோ்ந்து செந்தில்குமாரைத் தாக்கினாராம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆகாஷ்(21), அவரது நண்பா்களான முனிஸ்வரன் (20), குளத்தூா் (19) ஆகிய மூன்று பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் வெள்ளை மாடன் என்பவரை தேடி வருகின்றனா்.