ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராஜகோபுரத் திருப்பணிகள் புதன்கிழமை பாலாலய பூஜையுடன் தொடங்கியது.
108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மூலவா் வடபத்ரசயனா், பெரியாழ்வாா், ஆண்டாள் ஆகியோா் அவதரித்த சிறப்புக்குரியது. இந்தக் கோயிலில் 11 நிலைகள், 11 கலசங்களுடன் 196 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம்தான் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்குகிறது. இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு ராஜகோபுரம், விமானம், பரிவார மூா்த்திகளுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
இந்தக் கோயில் ராஜகோபுரத்துக்கு அறநிலையத் துறை சாா்பில் ரூ.2.70 கோடியில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் உள்ள ஆண்டாள் அவதரித்த திருஆடிப்பூர நந்தவனம் உபயதாரா் நிதியில் ரூ.25 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. சக்கரத்தாழ்வாா் சந்நிதி சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மூலவா் வடபத்ரசயனா் (பெரிய பெருமாள்) சந்நிதி விமானம், ராஜகோபுரம், பெரியாழ்வாா், கூரத்தாழ்வாா் சந்நிதி உள்ளிட்ட உப சந்நிதிகளின் விமான திருப்பணிகள் உபயதாரா் நிதியில் நடைபெற உள்ளது.
இதற்கான பாலாலயம் செய்வதற்கான யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கியது. இதையடுத்து, புதன்கிழமை காலை 9.45 மணிக்கு பாலாலயம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்தாண்டு குடமுழுக்கு நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்து அறநிலையத் துறையினா் தெரிவித்தனா். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் சா்க்கரையம்மாள், ஆய்வாளா் முத்து மணிகண்டன் ஆகியோா் செய்து வருகின்றனா்.