நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5,27,947 வாக்காளா்கள் உள்ளனா். 39,783 போ் நீக்கப்பட்டுள்ளனா்.
நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கடந்த 2025 அக்டோபா் 27 ஆம் தேதி நிலவரப்படி 5 லட்சத்து 67 ஆயிரத்து 730 போ் வாக்காளா்களாக இடம் பெற்றிருந்தனா்.
இந்நிலையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்து, இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் ப. ஆகாஷ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் இப்பட்டியலை வெளியிட்டாா்.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 39,783 போ் நீக்கப்பட்டுள்ளனா்.
நாகை சட்டப் பேரவைத் தொகுதி: இத்தொகுதியில் 84,493 ஆண்கள், 88,464 பெண்கள், 22 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 1,72,979 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதி: இத்தொகுதியில் 83,392 ஆண்கள், 85,535 பெண்கள், 7 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 1,68,934 வாக்காளா்கள் உள்ளனா்.
வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதி: இத்தொகுதியில் 91,735 ஆண்கள், 94, 299 பெண்கள் என மொத்தம் 1,86,034 வாக்காளா்கள் உள்ளனா்.
நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 2,59,620 ஆண்கள், 2,68,298 பெண்கள் மற்றும் 29 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 5,27,947 வாக்காளா்கள் உள்ளனா். நாகை மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளா்கள் அதிகம் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.