காரைக்கால்

முட‌ங்​கி​யி​ரு‌க்​கு‌ம் காரைக்​கா‌ல் மே‌ற்கு புற‌​வ​ழி‌ச்​சாலை பணி

பெருகி வரும் விபத்துகளை குறைக்கும் நோக்கில், ரூ. 76 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு முடக்கமடைந்திருக்கும்  மேற்குப் புறவழிச்சாலைப் பணியை

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

பெருகி வரும் விபத்துகளை குறைக்கும் நோக்கில், ரூ. 76 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு முடக்கமடைந்திருக்கும்  மேற்குப் புறவழிச்சாலைப் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கி வருகிறது.
புதுச்சேரி - காரைக்கால் வழித்தடத்தில்  சீர்காழி - காரைக்கால் வரையிலான சுமார் 45 கி.மீ தொலைவு தேசிய நெடுஞ்சாலை,   அகலம் குறுகியதாக உள்ளது. இதனால்,  45 கி.மீ தொலைவு பயணத்துக்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திலிருந்து சுமார் 2 மணி நேரம் வரை தேவைப்படுகிறது. காரைக்காலிலிருந்து, யூனியன் பிரதேச தலைநகரான புதுச்சேரிக்கு  மாணவர்கள், அரசுத்துறை அலுவலர்கள்,  அரசியல் பிரமுகர்கள் என பலரும் தினமும் பயணிக்கும் நிலையில்,  இந்த  சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பினரிடமிருந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,   விழுப்புரம் - புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினம் வரை  நான்கு வழிப்பாதை அமைக்க மத்திய அரசு திட்டம் வகுத்து அதற்கான அனுமதி வழங்கியது. இருப்பினும், நிலம் கையகப்படுத்தும் பணிகளில் நீடித்து வரும் சுணக்கம் காரணமாக, இத்திட்டப் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகின்றன.
இதனிடையே, நான்கு வழிச் சாலை திட்டத்துக்கு முன்பாக, காரைக்கால் மாவட்டம், பூவம் முதல் வாஞ்சூர் வரையிலான 20 கி.மீ தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றாக மேற்குப் புறவழிச் சாலை அமைக்க புதுச்சேரி அரசு திட்டம் வகுத்து, அதற்கான நிதி ஆதாரத்தை திரட்டியது.  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலைத் திட்டப்பணிக்கு, அப்போதைய முதல்வர் என். ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்.
இத்திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக ரூ. 21 கோடி மதிப்பில்  கீழகாசாக்குடி  தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மேற்கு புறமாக காரைக்கால் வாஞ்சியாற்றுப் பாலம் வரை 3. 20 கி.மீ தொலைவுக்குப் புறவழிச்சாலை  அமைக்கவும், இரண்டாம் கட்டமாக  ரூ. 55 கோடி மதிப்பீட்டில் வாஞ்சியாற்றுப் பாலத்திலிருந்து திருமலைராஜனாற்று பாலம் வரையிலான 5.5 கி.மீ தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த புறவழிச்  சாலைப் பணிக்குத் தேவையான நிலத்தை அரசு நிர்வாகம் ஏற்கெனவே கையப்படுத்தி தயார் நிலையில் வைத்திருந்ததன் காரணமாக,  முதல்கட்ட  புறவழிச் சாலைத் தடத்தில் மணல் நிரப்பி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்தக் கட்டப் பணிகள் ஏதும் நடைபெறாமல் பல மாதங்களாக முடங்கியுள்ளன. இப்பணிக்குத் தேவையான நிதி ஆதாரத்தை புதுச்சேரி அரசு அனுமதிக்காததே இந்த சுணக்கத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.   திட்டத்தின் முதல் கட்டப் பணிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்கும் நிலையில், அடுத்தக் கட்டப் பணிகள் குறித்த நிலை அச்சமளிப்பதாகவே உள்ளது.  
காரைக்கால் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை நகர்ப் பகுதிகளை ஊடுருவி செல்லும் தடமாக உள்ளது. வணிக நிறுவனங்கள் மிகுந்த நகர்ப் பகுதி வழியே தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனம் உள்பட அனைத்து வாகனப்  போக்குவரத்தும்  நடைபெறுவதால், விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்தப் பிரச்னைக்கான தீர்வு, புறவழிச் சாலைத் திட்டமே எனக் கருதப்பட்ட நிலையில், புறவழிச் சாலைத் திட்டப் பணிகள் முடங்கிக் கிடப்பது மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
புதுச்சேரி அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியாத அளவுக்கு நிதி பற்றாக்குறையில் இருப்பதாகவும், அரசுத் திட்டங்களுக்குக் கடன் வழங்க நிதியகங்கள் அனுமதி அளித்த நிலையிலும், வட்டி செலுத்தும் தகுதி குறைந்திருப்பதன் காரணமாக புதிய  திட்டங்களுக்குக் கடன் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ்  செயலர் ஜெ. சிவகணேஷ் கூறியது: காரைக்கால்,  வணிக நிறுவனங்கள் பெருகிய பகுதியாக  விளங்குகிறது. காரைக்கால் மாவட்டம்,   போலகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் பல தொழிற்சாலைகள் அமைய வாய்ப்புள்ளது.  ஏற்கெனவே தனியார் துறைமுகத்திலிருந்து ஏராளமான கனரக வாகனங்கள் இயக்கப்படும் நிலையில்,  வரும் ஆண்டுகளில் காரைக்கால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்காமல் இருக்க புறவழிச் சாலையும், நான்கு வழிச் சாலையும் அவசியம். இதற்கு புதுச்சேரி முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
காரைக்கால் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் வி. சண்முகசுந்தரம் கூறியது:  காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை திட்டப் பணி என்பது ரூ. 76 கோடி திட்டமாகும். முதல்கட்ட திட்டப் பணி ரூ. 21 கோடியில், ரூ. 4.5 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. சாலை தடத்தில்  மணல் நிரப்பும் பணி முடிவடைந்துள்ளது.  நிதி பற்றாக்குறை காரணமாக  திட்டப் பணியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.  நிதி அனுமதிக்க அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவுக்குள்,  புறவழிச்சாலை தடத்தில் கிராவல் நிரப்பி,  வாகனங்களை இந்தச் சாலை தடத்தில் தாற்காலிகமாக அனுமதிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் பணி தடத்தில் 3 ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டியது அவசியம். அதன் காரணமாக, இரண்டாம் கட்டப் பணிக்கான திட்ட மதிப்பீடு ரூ. 55 கோடியாக உள்ளது.   திட்டத்துக்கான நிதி  ஒதுக்கீடு கிடைத்துவிட்டால்,  அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஏறக்குறைய 9 கி.மீ  தொலைவு மேற்கு புறவழிச்சாலை பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT