காரைக்கால் நகரப் பகுதியில் பழுதடைந்த பழைய குடிநீர் குழாய்களுக்கு மாற்றாக, புதிய குழாய் பதிக்க சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சியான திமுக தயாராகி வருகிறது.
காரைக்கால் நகரப் பகுதியில்கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளில் பதிக்கப்பட்டகுடிநீர் குழாய்கள் ஆங்காங்கே பழுதடைந்து வருவதால் குடிநீர் விநியோகத்தில் அவ்வப்போது பாதிப்பு ஏற்படுகிறது.இதனால், பழைய குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு, புதிய குழாய்கள் பதிக்க ஹட்கோ கடன் ரூ.49.45 கோடியில் விரிவுப்படுத்தப்பட்ட குடிநீர் திட்டப் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தில், ராஜாத்தி நகர் பகுதியில் 80 அடி உயரம் மற்றும் 60 அடி உயரத்தில் இரண்டடுக்கு குடிநீர் தேக்கத் தொட்டி கட்டுதல், மேலும் 8 லட்சம் லிட்டர் கொள்ளளவில் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும்,அகலங்கண்ணு பகுதியிலிருந்து காரைக்கால் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வீதிகளிலும் பள்ளம் தோண்டி குடிநீர் குழாய்கள்பதிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இவ்வாறு தோண்டப்பட்ட பள்ளங்கள்பெரும்பாலான இடங்களில் முறையாக மூடப்படாமல் உள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி சிறுசிறு விபத்துகளும் ஏற்படுகின்றன.
குடிநீர் குழாய் பதித்தவுடன்,சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இத்திட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனாலும், இப்பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கு உரிய நிதியை புதுச்சேரி அரசு விடுவிக்காததால், சாலைகள் சீரமைக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இத்திட்டப் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, முன்னாள் அமைச்சரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச்.நாஜிம் கூறியது:
இந்த திட்டத்துக்கு ஹட்கோவிடமிருந்து நிதி பெறும் ஒப்புதலை நான் பேரவை உறுப்பினராக இருந்தபோது பெற்றுத்தந்தேன். பணிகள் தாமதமாக தொடங்கப்பட்டது. குழாய் பதிப்பு செய்யப்படும்போது,தோண்டப்பட்ட சாலையை செப்பனிடவும், வீடுகளுக்கு அரசு செலவிலேயே குழாய் பொருத்தித்தரவும் இந்த திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால்,பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. இந்த திட்டத்துக்கு நிதிப் பற்றாக்குறை உள்ளதுஎன பொதுப்பணித்துறையினர் கூறுவது ஏற்புடையது அல்ல.
இதே நிலை நீடித்தால் பருவமழையின்போது காரைக்கால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். இந்த பகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல்வரை சந்தித்துப் பேசி, இந்த பிரச்னைக்கு தீர்வுகாணவேண்டும். இந்த நிலை நீடித்தால், கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில், காரைக்கால் கழக நிர்வாகிகள் ஆலோசனைப் பெற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் பெற்று, காரைக்காலில் மக்கள் பங்களிப்புடன் திமுக மறியல் உள்ளிட்ட போராட்டங்களை அடுத்த சில நாள்களில் நடத்தும் என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் முகம்மது யாசின் கூறியது: காரைக்கால் நகரப் பகுதியில் காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு என 2 பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஏறக்குறைய 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், இந்த சாலைகள் சிதிமடைந்த பகுதியில் கடும் துன்பத்தை அனுபவித்துவருகின்றனர். ஆனால், ஆட்சியாளர்கள்உரிய நடவடிக்கைஎடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இந்த திட்டத்தை முறையாக நிறைவேற்ற நிதி ஒரு பிரச்னையாக இருந்தால், நிதியை பெறுவதற்கு எம்மாதிரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிந்தித்து செயலாற்றுவதே ஆட்சியாளர்களுக்கு அழகை சேர்க்கும்.நகரின் ஒட்டுமொத்த சாலைகளையும் புதுப்பிக்கவேண்டியதற்கான பணிகளை புதுச்சேரி ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் எடுத்தால் மட்டுமே, வரும் பருவமழைக் காலத்தில் மக்கள் துயரத்தை மேலும் சந்திக்காமல் தப்பிக்க முடியும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் கூறியது: சாலைகள் பாதிப்பு குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் இந்த பிரச்னை வந்தபோது, துணை நிலை ஆளுநரிடமும், இந்த திட்டத்துக்கு நிதி தேவையை தெரிவித்துள்ளோம்.நிதியாதாரம் கிடைத்துவிட்டால், சாலைப் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்றார்.
குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கிறது என்பது மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தாலும், எத்தனை காலம்தான் சிரமத்தை சந்தித்துக்கொண்டே இருப்பது என்பதுதான் மக்களின் கேள்வியாக இருக்கிறது. எனவே,இத்திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் வி.நாராயணசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் ஆகியோர் இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காரைக்கால் மக்களிடம் வாரந்தோறும் காணொலி மூலம் குறைகளை கேட்டறியும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, மக்களின் பிரதான பிரச்னையாக உருவெடுத்துள்ள நகர சாலைகள் மேம்பாட்டில் உரிய நடவடிக்கை எடுத்து, மக்களின் துயரை துடைக்கவேண்டும் என்பது பெரும்பான்மையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.