காரைக்கால்

திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் கைது

DIN

காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் திருட்டு வழக்கில் தொடர்புடையவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர், உதவி ஆய்வாளர் குமரவேல் மற்றும் போலீஸார் கோட்டுச்சேரி அருகே உள்ள பாரதியார் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  
அப்போது, சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது, அதில் வந்தவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், அவர் நெடுங்காடு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அன்பு (எ) சின்னையன் (35) என்பதும், கொத்தனாராக வேலை செய்து வருவதும், கடந்த 2006-ஆம் ஆண்டு கோட்டுச்சேரியில் நடைபெற்ற 8 திருட்டுச் சம்பவங்களில் கைதாகி, சிறை தண்டனை அனுபவித்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், கொத்தனாராக வேலை செய்துகொண்டு, பணி செய்யுமிடங்களை நோட்டமிட்டு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதன்படி, தமிழகப் பகுதிகளில் நாகை மாவட்டம், மயிலாடுதுறை, மணல்மேடு, பெரம்பூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2016-ஆம் ஆண்டில் திருட்டு, வழிப்பறி போன்றவைகளில் ஈடுபட்டுள்ளதும், இது சம்பந்தமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதில், கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், காரைக்காலில் கடந்த 2017-ஆம் ஆண்டு மேலகாசாக்குடியை சேர்ந்த லியோன்பால் என்பரவது வீட்டில் ரூ.1.25 லட்சம்  மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கத்தைத்  திருடிச் சென்றுள்ளார். 
இதேபோல், 23.8.2017-ஆம் தேதி நல்லாத்தூர்அருகே திருட்டு முயற்சி ஈடுபட்டதாக நெடுங்காடு காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி  மேலகாசாக்குடியில் பிடாரியம்மன் கோயில் தெருவில் ஜான்பிரிட்டோ என்பவர் வீட்டில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகை, செல்லிடப் பேசியை திருடிச்சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, சின்னையனை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், செல்லிடப்பேசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 
பின்னர், காரைக்கால் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த  நீதிபதி பிரபு, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT