காரைக்கால்

மஸ்தான் சாஹிப் தர்காவில் கந்தூரி விழா தொடக்கம்

DIN

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா தொடக்கத்தையொட்டி, திங்கள்கிழமை பிற்பகல் கொடியுடன் கூடிய பல்லக்கு மற்றும் கண்ணாடி ரத ஊர்வலம் நடைபெற்றது.
இறைதூதரில் சிறப்புக்குரியவராக கருதப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாவின் நினைவாக காரைக்காலில் தர்கா அமைந்துள்ளது.  இந்த தர்காவில் கந்தூரி விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்பட்டுவருகிறது.
நிகழாண்டு 196-ஆம் ஆண்டு கந்தூரி விழாவாகும். இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, பின்னர் ஏப்ரல் 24-ஆம் தேதி  மின்சார சந்தனக்கூடு புறப்பாடு நடைபெற்று, வலியுல்லாவின் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி, ஹலபு என்னும் போர்வை போர்த்தப்படுகிறது. 27-ஆம் தேதி கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.
இவ்வாறாக நடைபெறும் விழா, நிகழாண்டு திங்கள்கிழமை இரவு கொடியேற்றத்துக்காக பிற்பகல் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடி ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. ஊர்வலத்தில் கண்ணாடி ரதங்களும் கொண்டுசெல்லப்பட்டன.
முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலம் இரவில் தர்கா அருகே சென்றடைந்தது. பின்னர் அங்குள்ள பிரதானக் கம்பத்திலும், மினராக்களிலும் இரவு கொடியேற்றப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
 ரதம், பல்லக்கு ஊர்வலத்தின் பாதுகாப்புப் பணியில் போலீஸார்,  தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்த  துணை ராணுவப் படையினர் ஈடுபட்டனர்.  ஊர்வலத்தில் ஏராளமான கப்பல் போன்ற ஊர்திகள் பல வடிவமைக்கப்பட்டு சிறுவர்கள், இளைஞர்கள் இழுத்துச் சென்றனர்.
கந்தூரி விழாவுக்காக பல்வேறு வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம், சமாதானக் குழுவினர், அரசுத்துறை அதிகாரிகளுடன் முன்கூட்டியே ஆலோசனை நடத்தியிருந்தது. அதன்படி ரதம், பல்லக்கு செல்லும் வகையில் வீதிகளில் மரக் கிளைகள் அகற்றப்பட்டன. பாதுகாப்புக்காக கூடுதலான மகளிர் போலீஸார் பணியமர்த்தப்பட்டனர். கந்தூரி விழா ஏற்பாடுகளை தர்கா வக்ஃபு நிர்வாக சபையினர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT