காரைக்கால்

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம்: காரைக்காலில் அரசுப் பள்ளிகளுக்கு பின்னடைவு ஏன்?

தொடர்ந்து முதன்மையான தேர்ச்சி விகிதத்தையும், மதிப்பெண் மிகுதியையும் காட்டிவந்த காரைக்கால் அரசுப் பள்ளிகள்

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

தொடர்ந்து முதன்மையான தேர்ச்சி விகிதத்தையும், மதிப்பெண் மிகுதியையும் காட்டிவந்த காரைக்கால் அரசுப் பள்ளிகள், கடந்த 2018-19-ஆம் கல்வியாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் பின்னுக்குத் தள்ளப்பட்டன. 
 தமிழக கல்வி வாரியத்தைப் பின்பற்றியே புதுச்சேரியிலும் பாடங்கள், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும்போது சிறந்த விழுக்காட்டையும், மாநிலத்தில் முதன்மையான வரிசையில் இடம்பெறும் வகையிலும் மாணவர்கள் மதிப்பெண் பெற்றனர்.
இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது, அரசுப் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள், அவர்களின் அர்ப்பணிப்பு சேவை, ஆசிரியர்கள் தனியாக டியூஷன் எடுப்பதில் போதிய ஆர்வமின்மை, தனியார் பள்ளிகளின் வருகை குறைவு, மாணவர்கள் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட சமூகக் கேடான பல செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறைவு, குழந்தைகளின் கல்வி மீது பெற்றோர்கள் அதீத அக்கறை செலுத்தியது போன்றவற்றைக் கூறமுடியும்.
காரைக்காலில் குறிப்பாக நகரப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சேரும் எண்ணம் மாணவ மாணவியரிடேயே அதிகரித்துக் காணப்பட்டது. பிற கிராமப்புறத்தில் உள்ள மாணவ மாணவர்கள் கூட இந்த பள்ளிகளில் சேரும் எண்ணம் கொண்டோராக மாறியிருந்தனர்.
சேர்க்கை முறை : கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்டாக் என்ற அமைப்பு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் கொண்டு  தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. கலந்தாய்வில் மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்துகொண்டு, தாம் விரும்பும் பள்ளி, பாடப் பிரிவைத் தேர்வு செய்தல் நடைபெற்றது.
கடந்த 2 ஆண்டுகளாக மேற்கண்ட முறை கைவிடப்பட்டு, அந்தந்த பள்ளியில் விண்ணப்பத்தை மாணவர்கள் தனித்தனியாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.  அந்தந்த பள்ளிகளில் உள்ள பாடப் பிரிவுகள், ஆசிரியர்களின் நிலை உள்ளிட்டவைகளை ஆராய்ந்து, மாணவர்கள் தனித்தனி விண்ணப்பங்களை அளிக்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் தர வரிசையை மாணவர்கள் கண்காணித்தலும்,  அதற்கேற்ப அந்தந்த பள்ளிகளின் கலந்தாய்வில் கலந்துகொண்டு சேர்க்கை ஆணை பெறுவதும் அவர்களுக்கு பெரும் அலைச்சலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர் சேர்கையில், மாணவர்களுக்கு எளிமையான போக்கு இல்லை. மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அந்தந்த பள்ளி மாணவருக்கு அதே பள்ளியில் முன்னுரிமை,  மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை, 2-ஆவதாக அரசு உதவி பெறும் பள்ளி, 3-ஆவதாக தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாய்ப்பு என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
தாம் விரும்பும் பள்ளியில், விரும்பும் பாடப் பிரிவுகள் இல்லாமல் போனால் மாணவர்கள், கலந்தாய்வில் கிடைக்கக்கூடிய பள்ளியில் சேராமல் தனியார் பள்ளிகளுக்கு சென்றுவிடுவதாக கூறப்படுகிறது.
காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி  மாணவர்கள், அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் விரும்பும் பள்ளியாக நீண்ட காலமாக இருந்துவருகிறது. அந்தந்த பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற காரணத்தால் மாணவர்களைக் காட்டிலும் மாணவியர் அலைச்சலைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளுக்குச் சென்றுவிடுகிறார்களாம். இந்த முறை கொண்டுவரப்பட்டதன் மூலமும், மாணவர்கள் விரும்பும் பாடத் திட்டம் இல்லாமல் போனதாலும் முதன்மையான மதிப்பெண் மற்றும் சதவீதத்தில் உயர்ந்த நிலையில் தொடர்ந்து நீடித்து வந்த  தந்தை பெரியார் பள்ளி, அன்னை தெரஸா பள்ளி ஆகியன தற்போது  வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.
காரைக்கால் மாவட்டத்தில் 10 அரசுப் பள்ளிகளில் 1,412 பேர் தேர்வு எழுதியதில், 1,118 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி வீதம் 84.14. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 8.25 சதவீதம் அதிகம் என கல்வித்துறை தெரிவித்தது. அதே வேளையில் 13 தனியார் பள்ளிகளில் இருந்து 827 பேர் தேர்வு எழுதியதில், 786 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி வீதம் 95.04. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.07 சதவீதம் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டது. அரசு மேல்நிலைப் பள்ளிகளைப் பொருத்தவரை திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 96.17 சதவீதத்தில் முதலிடமும், திருப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி 88.96 சதவீதத்தில் 2-ஆம் இடமும், காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 88.11 சதவீதத்தில் 3-ஆம் இடமும், கோட்டுச்சேரி வ.உ.சி., தலத்தெரு என்.எஸ்.சி. போஸ் அரசு மேல்நிலைப் பள்ளிகள் முறையே 81.25 சதவீதம் பெற்று 4-ஆம் இடத்திலும், அம்பகரத்தூர் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளி 80.65 சதவீதம் பெற்று 5-ஆம் இடத்திலும்,  தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளி 78.57 சதவீதம் பெற்று 6-ஆம் இடத்திலும், கோயில்பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி 78.11 சதவீதம் பெற்று 7-ஆம் இடத்திலும், நெடுங்காடு ஜவாஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி 77.69 சதவீதம் பெற்று 8-ஆம் இடத்திலும், நிரவி அரசு மேல்நிலைப் பள்ளி 69.57 சதவீதம் பெற்று 9-ஆம் இடத்திலும் உள்ளன. தந்தை பெரியார் பள்ளியிலும், அன்னை தெரஸா பள்ளியிலும் படித்த மாணவர்கள் மருத்துவம், பொறியியல் என பல உயர்கல்வியில் சேர்ந்தனர். ஆனால் தற்போதைய நிலை தலைகீழாக மாறியிருப்பது பெற்றோர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாணவர் சேர்க்கை விவகாரத்தில் எளிமை, மாணவர் விரும்பும் பள்ளி கிடைக்கும் வாய்ப்பு, மாணவர் விரும்பும் பாடப் பிரிவும், பள்ளியும் ஒரே இடத்தில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருக்கும். இல்லையேல் மாணவர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதைத் தடுக்க முடியாது என்கின்றனர் கல்வியாளர்கள். இதில் அரசு நிர்வாகம் அலட்சியம் காட்டினால், தனியார் பள்ளிகள் மேம்பாட்டுக்கு அரசே மறைமுக ஆதரவு தெரிவிப்பதாக அமைந்துவிடும் என்கிறனர் சமூக பார்வையாளர்கள். எனவே நிகழ் கல்வியாண்டிலேயே காரைக்காலில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்கள் விரும்பக்கூடிய  கலை (ஆர்ட்ஸ்), பயாலஜி, கணினி அறிவியல், அறிவியல் (பியூர் சயின்ஸ்) பாடப் பிரிவுகள் இருக்க வேண்டும். அதற்கான ஆசிரியர்கள் கல்வியாண்டு தொடங்கும் போதே இருக்க வேண்டும். இதை புதுச்சேரி கல்வித்துறை சிறப்பு கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. வரும் 29-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதையொட்டி, அதற்குள் இதற்கான அறிவிப்புகள் வெளியாக வேண்டும். 
இதுகுறித்து புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறும்போது, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த மறுநாளே பிளஸ் 1 சேர்க்கைக்கான பணிகளைத் தொடங்கவும், பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர்களைத் தற்காலிக முறையில், ஓய்வுபெற்ற ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அடுத்த 2, 3 மாதங்களில் தகுதியான நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் அமைச்சர். 
தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கு மிகுதியான கட்டணம் செலுத்துவது ஏழை, நடுத்தர வர்க்க குடும்ப மாணவர்களுக்கு இயலாத நிலை உள்ளதால், அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் கல்வித்துறை இந்த ஆண்டே நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமான அம்சமாகும். காரைக்காலைச் சேர்ந்தவர் கல்வி அமைச்சராக இருக்கும் காலத்திலேயே காரைக்கால் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டால், அதன் பெருமைகளுக்கு அழிவு இருக்காது, ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்கள் பெரிதும் பயன்படுவார்கள் என கல்வியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT