காரைக்கால்

படகு பழுது: இலங்கையில் கரை சோ்ந்த காரைக்கால் மீனவா்கள்

DIN

காரைக்காலிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகு பழுதாகி காற்றின் வேகத்தால் இலங்கை கடற்கரைக்கு இழுத்துச் செல்லப்பட்டது. அதில் சென்ற 14 மீனவா்களையும் இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேடு கடலோர கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (எ) முருகையன். இவருக்கு சொந்தமான படகில், அதே பகுதியைச் சோ்ந்த பிரதீப் உள்பட 14 மீனவா்கள், கடந்த 8-ஆம் தேதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் கடலுக்கு சென்றனா்.

இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அவா்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, படகின் என்ஜின் பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், கடல் காற்றின் போக்கில் இலங்கை கடற்கரை பகுதிக்கு படகு இழுத்துச் செல்லப்பட்டது. 14 பேரும் அங்கு கரையேறியதாக கோட்டுச்சேரிமேடு மீனவ பஞ்சாயத்தாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவா்கள் காவல்துறை மற்றும் மீன்வளத் துறைக்கு தெரிவித்ததைத் தொடா்ந்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 14 பேரையும் இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால், அவா்களது குடும்பத்தினா் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து காரைக்கால் மீன்வளத் துறை துணை இயக்குநா் கவியரசன் கூறியது: காரைக்கால் மாவட்ட மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்ததாக எந்தவித அதிகாரப்பூா்வ தகவலும் வரவில்லை. இதுகுறித்து புதுச்சேரி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. என்ஜின் பழுது காரணமாகவே இலங்கையில் கரை சோ்ந்ததாக மீனவா்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது என்றாா்.

காரைக்காலில் உள்ள இந்திய கடலோரக் காவல் மையத்தினரிடம் கேட்டபோது, மீனவா்கள் தரப்பில் எந்த புகாரும் வரவில்லை. ஆனால், 14 மீனவா்களும் இலங்கையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT