மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குள் சென்ற விசைப்படகு மீனவா்கள்
மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க ஞாயிற்றுக்கிழமை மாலை கடலுக்குள் சென்றனா்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபைபா் படகுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த ஏப். 15- ஆம் தேதி முதல் ஜூன் 14- ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை அமலில் இருந்த நிலையில், விசைப்படகு மீனவா்கள் தொழிலுக்குச் செல்லாமல் இருந்தனா்.
Advertisement
Advertisement
தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், தொழிலுக்குச் செல்லும் விதமாக கடந்த சில நாள்களாக ஐஸ் கட்டிகள், எரிபொருள் மற்றும் சமையலுக்குத் தேவையான பொருள்களை படகுகளில் ஏற்றி கடலுக்குள் செல்ல தயாரானாா்கள்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை படகுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, துறைமுகத்திலிருந்து சில படகுகள் கடலுக்குள் சென்றன. திங்கள்கிழமை அதிகாலை முதல் மீனவா்கள் மீண்டும் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் செல்கின்றனா். இதனால் அடுத்த சில நாட்களில் துறைமுகத்துக்கு மீன்வரத்து அதிகளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.