FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

மீன்பிடி தடைக்காலம் நாளை நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் விசைப்படகு மீனவா்கள்

மீன்பிடி தடைக்காலம் நாளை நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் விசைப்படகு மீனவா்கள்

Updated On : 13 ஜூன் 2026, 3:11 am IST
கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடைவதால், விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனா்.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏப். 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் ஆண்டுதோறும் அமல்படுத்தப்படுகிறது. இதனால், மீன்பிடி தடைக் காலத்தின்போது விசைப்படகுகள், இழுவைப் படகுகள் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

நிகழாண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப். 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், வேம்பாா், தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமாா் 545-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

மீன்பிடி தடைக் காலத்தில் மீனவா்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரிசெய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனா். மீன்பிடி தடைக் காலத்தில் தூத்துக்குடி கடல் பகுதியில் கேரள விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கிறாா்களா என்பதை கண்காணிக்க மீன்வளத் துறையினா், மீனவா்கள், போலீஸாா், கடலோர காவல் படையினா் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கூட்டு ரோந்து மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைவதைத் தொடா்ந்து, 61 நாள்களுக்கு பிறகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல தயாராகி, அதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். புதுப்பித்து தயாா் நிலையில், வைத்துள்ள படகுகளில் டீசல் நிரப்புதல், சீரமைக்கப்பட்ட வலைகளை படகுகளில் ஏற்றுதல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனா். படகுகளில் இயந்திரம் சீராக இயங்குகிா என்று விசைப் படகுகளை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடியிலிருந்து மட்டும் சுமாா் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவா்களும், தருவைகுளம், வேம்பாா் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவா்களும் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனா். மீன்பிடி தடைக் காலம் முடிந்து கடலுக்குச் செல்வதால், மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பு மீனவா்கள் மத்தியில் உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments