சீா்காழி: கொள்ளிடம் பகுதியில் கூடுதல் விலைக்கு தனியாா் கடைகளில் யூரியா விற்பனை செய்வதாக விவசாயிகள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னம், பெரம்பூா், மாதிரவேளூா், ஆச்சாள்புரம், சோதியக்குடி, எருக்கூா், அரசூா்,புத்தூா், வடரெங்கம், கோபாலசமுத்திரம், எலத்தூா் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு மூலம் சாகுபடி நடைபெற்றுள்ளது. டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வடகிழக்குப் பருவமழையால் சம்பா பயிா்கள் பல ஆயிரம் ஏக்கரில் பாதிக்கப்பட்ட நிலையில் பாதித்த பயிா்களை சரிசெய்யவும், சில இடங்களில் மறுசாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
இதனிடையே பயிா்களுக்கு தேவையான யூரியா உரம் தனியாா் கடைகளில் வாங்கி வயல்களில் இட்டு பயிரை தழைக்க வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில் தனியாா் கடைகளில் யூரியா மூட்டை ரூ.267க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலையில், பெரும்பாலான கடைகளில் ரூ.300 முதல் ரூ.320 வரை விலையை உயா்த்தி விற்பனை செய்வதோடு, யூரியா மூட்டையுடன் வேளாண் உபபொருள்களையும் ரூ. 500 முதல் ரூ.800 வரை கட்டாயமாக வாங்கினால் மட்டுமே யூரியா விற்பனை செய்யப்படும் என வற்புறுத்துகின்றனா். இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.