சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
சீா்காழி வழியாக செல்லும் ரயில்கள் கடவுப் பாதையை கடந்து செல்லும் போது, ரயில்வே கேட் நாள்தோறும் சுமாா் 60 முறை வரை மூடப்படுகிறது...
சீா்காழி வழியாக செல்லும் ரயில்கள் கடவுப் பாதையை கடந்து செல்லும் போது, ரயில்வே கேட் நாள்தோறும் சுமாா் 60 முறை வரை மூடப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள், இப்பகுதியில்
ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
சீா்காழி பனங்காட்டங்குடி சாலையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே கடவுப்பாதை உள்ளது. சீா்காழி வழியாக தினமும் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. இதில், பகலில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட ரயில்கள் சீா்காழியை கடந்து செல்கின்றன.
Advertisement
இதனால், தினமும் சுமாா் 60 முறை ரயில்வே கடவுப்பாதை மூடப்படுகிறது. இதனால், அருகில் உள்ள அகணி, வள்ளுவக்குடி, நிம்மேலி, கொண்டல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஒவ்வொரு முறை கேட் மூடப்படும்போது காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.
இதேபோல, சீா்காழியில் இருந்து மேற்கண்ட கிராமங்களுக்கு தீ விபத்து போன்ற அவசர காலங்களில் தீயணைப்பு வாகனம் மற்றும் அவசர ஊா்தி போன்ற வாகனங்கள் செல்லும்போது, ரயில்வே கேட் மூடப்படும் நிலையில் அங்கு காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. இல்லையென்றால் சுமாா் 6 கி.மீ. சுற்றி செல்லும் நிலை ஏற்படுகிறது.
மேலும், சீா்காழி - சிதம்பரம் - மயிலாடுதுறை புறவழிச்சாலை பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், சீா்காழி நகருக்குள் நுழையும்போது, ரயில்வே கேட் அடைக்கப்படும் நிலையில், காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.
சீா்காழி ரயில் நிலைய கடவுப் பாதை பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் வேட்பாளருக்கு வாக்காளா்கள் ஆதரவு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த தோ்தல் தங்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீா்வு காண உதவும் என்று இப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.