நாகப்பட்டினம்

குடிநீருக்காக தினமும் 5 கி.மீ. பயணிக்கும் மக்கள்!

பருவமழை பொய்த்ததால், நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் நிலத்தடிநீர் மட்டம் பாதிக்கப்பட்டு, கடும் குடிநீர்

எம். ஞானவேல்

பருவமழை பொய்த்ததால், நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் நிலத்தடிநீர் மட்டம் பாதிக்கப்பட்டு, கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சுமார் 5 கி.மீ. தொலைவு சென்று குடிநீர் பிடித்து வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
சீர்காழி வட்டத்துக்குள்பட்ட சீர்காழி நகர் பகுதி 24 வார்டுகளையும், சீர்காழி  ஊராட்சி ஒன்றியம் 37 ஊராட்சிகளையும், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் 42 ஊராட்சிகளையும் உள்ளடக்கிய பகுதியாகும்.
மேற்கண்ட பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் நிலத்தடி நீர்மட்டம்  உப்பு நீராகவும், காவி நீராகவும் மாறியதால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்  திட்டத்தின் கீழ், கொள்ளிடம் ஆற்றில் பல்வேறு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டது.
அதன்படி, சீர்காழி நகர்ப் பகுதி, சீர்காழி ஊராட்சி ஒன்றியம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளுக்குள்பட்ட பெரும்பான்மையான ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கடற்கரை கிராமங்களான மகேந்திரப்பள்ளி, காட்டூர், புளியந்துரை உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. அதிலும் கடந்த சில மாதங்களாக வாரத்துக்கு 2 நாள்களுக்கு குறைவான அளவே குடிநீர் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு விநியோகம் செய்யப்படும் குறைவான தண்ணீரை அதிக நபர்கள் உள்ள குடும்பத்தினருக்கு குடிப்பதற்கு பற்றாக்குறையாக இருப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதேபோல், கடந்த ஆண்டு  பருவமழை பெய்யாததாலும், மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் சீர்காழி கடைமடை பகுதிக்கு வராததாலும் ஆறு, குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.
கொள்ளிடம் ஒன்றிய திமுக செயலர் செல்ல.சேது. ரவிக்குமார்: பவுசுபேட்டை, காட்டூர், சம்மங்காடு, சுப்ராயபுரம் உள்ளிட்ட கடற்கரையையொட்டிய பல்வேறு கிராமங்களில்
நிலத்தடிநீர் உப்பு நீராக இருப்பதால், அப்பகுதி மக்கள் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்
திட்டத்தையே நம்பி உள்ளனர்.
வாரத்துக்கு 2 நாள்கள்  மட்டுமே விநியோகிக்கப்படும் குறைந்த அளவு குடிநீர்  குடியிருப்புவாசிகளின் தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை.  இதன்
காரணமாக,  கிராமத்தினரும்,  கால்நடைகளும் தண்ணீருக்கு தவிக்கும் நிலை உள்ளது.  கிராமத்தினர் தங்கள் தேவையை பூர்த்தி செய்துகொள்ள சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள வெட்டாற்றங்கரைக்கு சென்று குடங்களில்  தண்ணீர் பிடிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஆண்கள் சைக்கிள், இருசக்கர வாகனம் மூலமாகவும், பெண்கள் நடந்து சென்றும் குடங்களில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
கொள்ளிடம் ஒன்றியத்தில் இதுபோன்று பல கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க நிலையான எதிர்காலத் திட்டத்தை  செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், திமுக தலைமை உத்தரவைப் பெற்று பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.
ஆச்சாள்புரம் விக்னேஷ்: கொள்ளிடம் ஒன்றியத்தில் கடற்கரையையொட்டிய கிராமங்களில் பருவமழை பொய்த்ததாலும், கடந்த காலங்களில் பாசனத்துக்காக   மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் வாய்க்கால்களில் கடைமடை பகுதிக்கு வந்து சேராததாலும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பல கிராமங்களில் குடிநீருக்காக பல கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் ஒருசில  குடும்பத்தினர் வீடுகளை காலி செய்துவிட்டு வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர். எனவே அரசு எங்கள் பகுதிக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும்.  இல்லையென்றால் கிராம மக்கள் அனைவரும் ஊரை காலி செய்து விட்டு, வேறு ஊருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT