நாகப்பட்டினம்

திருக்குவளைப் பகுதியில் விதை நெல் தட்டுப்பாடு: விவசாயிகள் கவலை

DIN

திருக்குவளை பகுதியில் சம்பா சாகுபடியில் தீவிரம் காட்டிவரும் விவசாயிகள் விதை நெல் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட  காவிரி நீர் பல நாள்களுக்குப் பிறகே திருக்குவளைப் பகுதியை வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து,  விவசாயிகள் சம்பா சாகுபடியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக  நிலத்தை உழுது தயார்படுத்திய விவசாயிகள், தற்போது,  நெல் விதைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 
இந்நிலையில், சம்பா சாகுபடிக்கு ஏற்ற,  மழை வெள்ளத்தை தாங்கி வளரக்கூடிய சிஆர்1009, பிபிடி,  ஐஆர் 20, ஏடிபி 45, ஏடிபி38, 9408 உள்ளிட்ட விதை நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் போதிய அளவில் இருப்பு இல்லாததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். புது ரகமான டிகேஎம்13 ரகம் மட்டுமே இருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், நீரின்றி குறுவை சாகுபடி பொய்த்துப்போன நிலையில், விதை தட்டுப்பாட்டால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்படுமோ என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து, மீனம்பநல்லூரைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீதர் கூறியது:
மேட்டூர் அணை நிரம்பி சாகுபடிக்கு நீர் கிடைத்தது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், விதை நெல் தட்டுப்பாட்டால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வேளாண் விரிவாக்க மையத்தில் நாங்கள் கேட்கும்  விதை நெல் இல்லாதது எங்களுக்கு வேதனையை அளிக்கிறது. ஆதார் கார்டு ஒன்றுக்கு 20 கிலோ விதை நெல் மட்டுமே வழங்குகின்றனர். இதனால், போதிய விதை நெல் கிடைக்காமல் தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. அதிக விலை கொடுத்து விதை நெல்லை வாங்க முடியாத விவசாயிகள்,  தங்கள் நிலங்களை தரிசாகப்போடும் அவல நிலை ஏற்படும்.  எனவே, இப்பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காணவேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT