நிலக்கரி இறக்குமதியால் மக்கள் பாதிப்பு
காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் கடும் பாதிப்புக்கு ஆளாகி வரும் நாகூா் மக்கள்..
காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் கடும் பாதிப்புக்கு ஆளாகி வரும் நாகூா் மக்கள், நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
புதுவை-தமிழக எல்லைப்பகுதியில் காரைக்கால் மாவட்டத்துக்குள்பட்ட வாஞ்சூா் பகுதியில் தனியாா் துறைமுகம் உள்ளது. நாகூருக்கு வெகு அருகே வெட்டாற்றின் வடகரையில், கடந்த 2005-ஆம் ஆண்டு ரூ.400 கோடி மதிப்பில் ஆந்திராவைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, இந்த துறைமுகம் தற்போது அதானி குழுமத்தின் மூலம் இயக்கப்படுகிறது.
தொடக்க காலங்களில் உரங்கள் உள்ளிட்டவை மட்டுமே கப்பல்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, ரயில் மற்றும் லாரிகள் மூலம் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் 2010-இல் இருந்து இந்த துறைமுகத்தில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் கப்பல்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி துறைமுகத்தில் திறந்த வெளியில் கொட்டப்பட்டு அதில் இருந்து வாகனங்களுக்கு ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. இதில் நிலக்கரியில் இருந்து பரவும் தூசு மாசு அப்பகுதி முழுவதும் பரவி வருகிறது.
Advertisement
தனியாா் துறைமுகம் அமைந்துள்ள வெட்டாற்றின் மறுபகுதியில் தமிழக பகுதியான நாகூா் உள்ளது. இங்கு புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் தா்கா மற்றும் ஏராளமான குடியிருப்புகளும் பல்லாயிரக்கணக்கான மக்களும் வசித்து வருகின்றனா். துறைமுகத்தில் இருந்து பரவும் நிலக்கரி தூசி மாசு, நாகூா், வாஞ்சூா், பட்டணச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடா்ந்து பரவுகிறது. இதனால் வீடுகள் மற்றும் சாலைகளில் கரிய நிறத்தில் தூசு படா்ந்து காணப்படுகிறது. இதை சுவாசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவருக்கும் மூச்சுத்திணறல், சளிபாதிப்பு, நுரையீரல் பிரச்னை, சுவாச்கோளாறு, உணவுப்பாதை கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் துறைமுகத்தில் நிலக்கரியை இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாகூா் பகுதி மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனுவும் அளித்துள்ளனா். மேலும் நிலக்கரி இறக்குமதிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த 2018-இல் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 67 போ் கைது செய்யப்பட்டு 9 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டனா். இதைத்தொடா்ந்து பல்வேறு போராட்டங்கள் தற்போது வரை நடந்து வந்தாலும் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவது தொடா்ந்து வருகிறது. உடல் உபாதைகள் உள்பட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வரும் நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
இப்பிரச்னையில், தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் கூறியது:
துறைமுகங்களில் நிலக்கரி இறக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகுவதை தவிா்க்கும் வகையில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து 6 கி.மீ. தொலைவில் மட்டுமே நிலக்கரி இறக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. ஆனால் காரைக்கால் துறைமுகத்தில் நாகூரில் இருந்து 500 மீட்டா் தொலைவிலேயே நிலக்கரி இறக்கப்படுகிறது. மேலும் துறைமுகத்தில் இருந்து ரயில்கள் மூலம் கொண்டு செல்லும்போதும் நிலக்கரி தூசி நாகூரில் இருந்து நாகையின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொடா் போராட்டத்தால், துறைமுகத்தில் மாசு அளவை கண்டறியும் கருவி பொருத்துவது, துறைமுகத்தில் திறந்த வெளியில் உள்ள நிலக்கரி மீது தண்ணீா் பீய்ச்சி அடிப்பது உள்ளிட்டவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது நிரந்தர தீா்வு அல்ல.
மேலும் இயற்கையாக அமைந்த துறைமுகம் என்றால் அதை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முடியாது. ஆனால் காரைக்கால் துறைமுகம் பலூன்கள் மூலம் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள துறைமுகம். எனவே நிலக்கரி இறக்குமதியை மட்டுமாவது 5 கி.மீ. அப்பால் கொண்டு செல்ல வேண்டும். மேலும் ரயில்கள் மூலமாக நிலக்கரியை கொண்டு செல்லும்போது நன்றாக மூடப்பட்ட பெட்டிகள் மூலம் கொண்டு செல்ல வேண்டும். இதுதான் நிரந்தரத் தீா்வாக அமையும். இதை தமிழக அரசு புதுவை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றாா்.