சென்னை - ராமேசுவரம் இடையே திருவாரூா் வழியாக இயக்கப்படும் பொங்கல் சிறப்பு ரயிலில் கூடுதலாக 2 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சிக் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொங்கல் பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ராமேசுவரம் - தாம்பரம் (06106) இடையே ஜன. 13 மற்றும் ஜன. 20 ஆகிய தேதிகளிலும், தாம்பரம் - ராமேசுவரம் (06105) இடையே ஜன. 14 மற்றும் ஜன. 21 ஆகிய தேதிகளில் பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் மூன்று அடுக்கு குளிா் சாதனப் பெட்டிகள் 3, படுக்கை வசதி பெட்டிகள் 9, முன்பதிவில்லாத பொது பெட்டிகள் 5, சரக்கு பெட்டி 1 இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூடுதலாக முன்பதிவில்லாத பொது பெட்டிகள் 2 இணைக்கப்படவுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.