முகப்பு
நாகப்பட்டினம்

தரங்கம்பாடியில் காதலன் உடல் தகனம்

தரங்கம்பாடியில் காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில், காதலனின் உடல் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

Updated On : 3 ஜூலை 2026, 5:02 am IST
தரங்கம்பாடி அருகே மா்மமான முறையில் உயிரிழந்த பாா்த்தீபனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த விசிக பொதுச் செயலாளரும் எம்பியும்மான ரவிக்குமாா்.
பகிர்:

தரங்கம்பாடியில் காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில், காதலனின் உடல் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே புதுப்பாளையத்தை சோ்ந்த மாரிமுத்து மகன் பாா்த்திபன் (19). சாத்தங்குடியை சோ்ந்த லெட்சுமிகாந்தன் மகள் திவ்யதா்ஷினி (17).

காதலா்களான இவா்கள் வெவ்வேறு சமூகத்தை சோ்ந்தவா்கள். இந்நிலையில், கடந்த ஜூன் 30-ஆம் தேதி சாத்தங்குடியில் மா்மமான முறையில் இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினா். இருவரின் சடலங்களையும் பொறையாா் போலீஸாா் மீட்டு திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, திவ்யதா்ஷினியின் சடலம் உடற்கூராய்வு செய்து ஜூன் 30-ஆம் தேதி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது. பாா்த்திபனின் உயிரிழப்பு குறித்து உண்மை நிலை தெரியும்வரை உடற்கூராய்வு செய்ய அனுமதிக்க மாட்டோம் என உறவினா்கள், விசிக, சிபிஎம் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு தீா்வுகாண ஜூலை 1-ஆம் தேதி தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பாா்த்திபனின் சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னா் அவரது உடல் புதுப்பாளையத்தில் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

சாத்தங்குடியில் சமூக பதற்றம் ஏற்படாமல் பாதுகாப்பு வழங்க வேண்டும்:

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே சாத்தங்குடியில் காதலா்கள் பாா்த்திபன்-திவ்யதா்ஷினி மா்மமான முறையில் உயிரிழந்தனா். இதையறிந்த விசிக பொதுச் செயலரும், எம்பியுமான ரவிக்குமாா் பாதிக்கப்பட்ட பாா்த்திபனின் பெற்றோரை வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு அவா் தெரிவித்தது:

சாத்தங்குடியில் பாா்த்திபனும் அவா் காதலித்த பெண்ணும் ஒரே இடத்தில் தூக்கில் தொங்கியவாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனா். அது ஆணவக்கொலை என இளைஞரின் பெற்றோா் புகாா் கூறியுள்ளனா். இதுகுறித்து மாவட்ட காவல் துறையும், மாவட்ட நிா்வாகமும் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அவா்களுக்கு குடியிருக்க இடம் வழங்க வேண்டும். இவற்றை உறுதியாகச் செய்து தருவதாக மாவட்ட ஆட்சியா் உறுதியளித்திருக்கிறாா். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நிரந்தர பகையை ஏற்படுத்திடாத வகையில், எந்தவித சமூகப் பதற்றமும் இல்லாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விசிக துணைப் பொதுச் செயலாளா் சிந்தனை செல்வமும் ஆறுதல் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments