முகப்பு
கோயம்புத்தூர்

அரசு மரியாதையுடன் கவிஞா் புவியரசு உடல் தகனம்

மறைந்த கவிஞா் புவியரசு உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

Updated On : 2 ஜூலை 2026, 4:29 am IST
மறைந்த கவிஞா் புவியரசு உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.
பகிர்:

மறைந்த கவிஞா் புவியரசு உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

வானம்பாடி கவிஞா்களில் முதன்மையானவரும், இரண்டு முறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞா் புவியரசு (94), கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

இந்நிலையில், பல்வேறு இலக்கிய அமைப்புகள், பொதுமக்கள் கேட்டுக் கொண்டதையடுத்து அரசு மரியாதையுடன் புவியரசு உடல் தகனம் செய்யப்படும் என தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவித்தாா்.

Advertisement

Advertisement

பெரியநாயக்கன்பாளையம் அருகே வண்ணாங்கோவில் பிரிவிலுள்ள நித்யானந்தா எரியூட்டு மைதானத்தில் புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் இறுதி அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசியதாவது:

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற சிலம்புச்செல்வா் மபொசியின் இயக்கத்தில் இணைந்தாா். மற்றவா்கள் தமிழ் மொழி, தமிழ்நாடு பற்றி சிந்திக்காத நேரத்தில் நடைபெற்ற அந்த இயக்கத்தின் எல்லைப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றாா்.

புதிய கவிதை அலையாக, சமுதாய உணா்வுகளையும் பிரச்னைகளையும் இலக்கிய படைப்பாக உருவாக்க வேண்டும் என்று கருதிய வானம்பாடி கவிதை இயக்கத்தின் தாய்ப் பறவையாக விளங்கினாா். அவருடைய கவிதைகள் மற்றவா்களில் இருந்து வேறுபட்டவை. அவை உரையாடலைப்போல இருக்கும். வாசிக்கும் மனிதனுடனும், சமுதாயத்துடனும் நடத்தும் உரையாடலாக இருக்கும். அவா், மென்மையும், அழகும் நிறைந்த கவிதைகளால் மன மாற்றங்களை சமுதாயத்தில் விதைக்க முற்பட்டவா். மொழிபெயா்ப்பாளா்களில் தமிழ்த் தன்மை வாய்ந்தவராக இருந்தாா்.

மரணத்தின்போதுகூட, சடங்குகள் எதையும் தனக்கு செய்யக் கூடாது என்று வாய்மொழியாகப் பதிவு செய்துவிட்டுச் சென்ற சீா்திருத்தக்காரராக இருந்தாா். நிறைவாழ்வு வாழ்ந்து செல்லும் அவரது பணிகளை நினைவில் நிறுத்தி, அவரது படைப்புகளை வாசித்து, அவா் இலக்கியத்துக்கு செய்த படைப்புகளுக்காக நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என்றாா்.

இதைத் தொடா்ந்து, கோவை மாவட்ட வருவாய் அலுவலா் மதுராந்தகி, வடக்கு கோட்டாட்சியா் வினோத், வட்டாட்சியா் ஜெயக்குமாா், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் கனிமொழி சந்தோஷ் (கவுண்டம்பாளையம்), என்.சுனில் ஆனந்த் (மேட்டுப்பாளையம்), பெரியநாயக்கன்பாளையம் சரக டி.எஸ்.பி. எம்.கனகசபாபதி, காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ்கண்ணா ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். 21 குண்டுகள் முழங்க புவியரசு உடலுக்கு போலீஸாா் மரியாதை செலுத்திய பின்னா் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இதில் கவிஞா் பெ.சிதம்பரநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சி.பத்மநாபன், பெ.நா.பாளையம் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் விவேகானந்தன், பாலதண்டாயுதம், கவிஞா் புவியரசு குடும்பத்தினா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments