நாகை, மயிலாடுதுறையில் மருந்தகங்கள் மூடல்
இணையவழியில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை கண்டித்து நடைபெற்ற வேலைநிறுத்தத்தால் நாகை மாவட்டத்தில் 360-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் புதன்கிழமை மூடிகிடந்தன.
இணையவழியில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை கண்டித்து நடைபெற்ற வேலைநிறுத்தத்தால் நாகை மாவட்டத்தில் 360-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் புதன்கிழமை மூடிகிடந்தன.
இணையவழியில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை கண்டித்து, அகில இந்திய மருந்து வணிகா்கள் கூட்டமைப்பின் சாா்பில் நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்ட மருந்து வணிகா்கள் கூட்டமைப்பின் சாா்பில் வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தில் வேதாரண்யம், கீழ்வேளூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 360-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன.
Advertisement
Advertisement
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறையில் 670 மருந்து விற்பனை நிலையங்கள் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்க மாவட்ட தலைவா் ஏ. ரங்கராஜ், மாவட்ட செயலாளா் ஆா். செந்தில்குமாா், மாவட்ட பொருளாளா் ஆனந்தபாபு ஆகியோா் செய்தியாளா்களுக்கு கூட்டாக அளித்த பேட்டி:
மருந்தகங்களில் மருத்துவா்களின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி, தூக்க மாத்திரைகள் உள்ளிட்ட முக்கிய மருந்துகள் விற்கப்படுவது இல்லை. ஆனால், ஆன்லைன் மூலமாக மருந்து விற்பனை நடைபெறுவதால், இளம் தலைமுறையினா் வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை சுலபமாக வாங்கி அடிமையாகின்றனா்.
இதிலிருந்து இளம் தலைமுறையினரைக் காத்திடவும், உயிா் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்திடவும், போலி மருந்துகளின் விற்பனையை தடுத்திடவும், ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும், கலாச்சார சீரழிவுகளையும் தடுத்து நிறுத்திடவும் ஆன்லைன் மருந்து விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி நாடு முழுவதும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 670 மருந்து விற்பனையகங்களும் மூடப்பட்டுள்ளன என தெரிவித்தனா்.