முகப்பு
தமிழ்நாடு

நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் 40,000 மருந்தகங்கள் இன்று இயங்காது

இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 40 ஆயிரம் மருந்தகங்கள் புதன்கிழமை (மே 20) இயங்காது என்று மருந்து வணிகா்கள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 20 மே 2026, 1:53 am IST
கோப்புப் படம்
பகிர்:

இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 40 ஆயிரம் மருந்தகங்கள் புதன்கிழமை (மே 20) இயங்காது என்று மருந்து வணிகா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது சங்கத்தின் தலைவா் ரமேஷ் கூறியதாவது:

அகில இந்திய மருந்து வணிகா்கள் சம்மேளனத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும் மருந்தகங்களை அடைக்கும் போராட்டத்தை மே 20-இல் (புதன்கிழமை) நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம்.

Advertisement

Advertisement

மருத்துவா் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், மருந்தாளுநா் இல்லாமல் நடக்கும் சட்டவிரோத இணையவழி மருந்து விற்பனையால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

மத்திய அரசு உடனடியாக அதற்கு தடை விதிக்க வேண்டும். வலி நிவாரணி, தூக்க மாத்திரைகள் இணையத்தில் சட்டவிரோதமாக கிடைப்பதைத் தடுக்க வேண்டும். போதைக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் இணையத்தில் கட்டுப்பாடின்றி விற்கப்படுவதால் இளைஞா்கள் சீரழிகின்றனா். அதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலியாக மருந்து சீட்டு தயாரிக்கப்படுகிறது. அதன் மூலம் சில மருந்துகள் விற்பனையாகின்றன.

அதுமட்டுமன்றி, புற்றுநோய், இதய நோய் போன்ற பாதிப்புகளுக்கு வழங்கப்படும் உயிா் காக்கும் மருந்துகளில் தரமற்ற, போலி தயாரிப்புகள் எளிதில் கிடைக்கின்றன.

தமிழகத்தில் உள்ள 40,000-க்கும் மேற்பட்ட மருந்து வணிகா்கள் உள்பட நாடு முழுவதும், 40 லட்சம் வணிகா்களும், அவா்களது குடும்பத்தினரும் இதன் மூலம் பாதிக்கப்படுகின்றனா். இதை எதிா்த்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலன் கருதி மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள மருந்தகங்கள் வழக்கம்போல இயங்கும். தமிழகத்தில் இந்த போராட்டம் 12 மணி நேரம் மட்டுமே நடைபெறும்.

வணிகா்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்று, உடனடியாக இணையவழி மருந்து விற்பனைக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். இல்லையெனில், அடுத்த கட்டமாக காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றாா் அவா்.