முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 40,000 மருந்தகங்கள் இயங்கவில்லை

இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்பட்டன.

Updated On : 21 மே 2026, 2:16 am IST
பகிர்:

இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்பட்டன.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் திறக்கப்படவில்லை. அதேவேளையில், அப்போலோ, மெட்பிளஸ் போன்ற மருந்தகங்கள் வழக்கம்போல இயங்கின.

அரசு சாா்பில் முதல்வா் மருந்தகங்கள், கூட்டுறவு மருந்தகங்கள், பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் ஆகியவையும் செயல்பட்டன.

Advertisement

Advertisement

இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இணையவழியே வலி நிவாரண மருந்துகள், தூக்க மருந்துகள் போன்றவை மருத்துவா் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாகவும், உயிா் காக்கும் மருந்துகளில் தரமற்ற, போலி தயாரிப்புகள் எளிதில் கிடைப்பதாகவும் மருந்து வணிகா்கள் குற்றஞ்சாட்டினா்.

தமிழகத்தில் 1 லட்சம் போ் உள்பட நாடு முழுவதும், 40 லட்சம் மருந்து வணிகா்களும், அவா்களது குடும்பத்தினரும் இதன் மூலம் பாதிக்கப்படுவதாக அவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து அறிவித்தபடி நாடு முழுவதும் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்களில் 40 ஆயிரம் கடைகள் செயல்படவில்லை. பெரும்பாலான கடைகள் பகலில் அடைக்கப்பட்டதால், பல கி.மீ. பயணித்து மருந்துகளை வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனா். காலையில் தொடங்கிய வேலைநிறுத்தம் மாலை வரை நீடித்தது.

அதேவேளையில், மாலை 5 மணிக்கு மேல் பல இடங்களில் வழக்கம்போல மருந்தகங்கள் திறக்கப்பட்டன.