தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஆவணங்கள் ஆய்வு
முத்துப்பேட்டை பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஆவணங்கள் செவ்வாய்க்கிழமை தனிநபர் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
முத்துப்பேட்டை பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஆவணங்கள் செவ்வாய்க்கிழமை தனிநபர் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
18 வார்டுகள் கொண்ட முத்துப்பேட்டை பேரூராட்சியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சி அலுவலகத்தில் 14 நிரந்தர பணியாளர்கள், 4 தாற்காலிக பணியாளர்கள் உள்ளனர். மேலும், துப்புரவு பணிக்கென 16 நிரந்தர பணியாளர்களும், 24 தாற்காலிக பணியாளர்களும் உள்ளனர். இந்நிலையில், நகர் முழுவதும் சுகாதார சீர்கேடு மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இந்நிலையில், முத்துப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த கலிமா நிஜாமுதீன் என்பவர் பேரூராட்சியில் உள்ள ஆவணங்களை தான் ஆய்வு செய்யவேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மனு செய்திருந்தார். அதன்பேரில், பேரூராட்சி ஆவணங்களை ஆய்வு செய்ய கலிமாநிஜாமுதீனுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, கலிமா நிஜாமுதீன், மதுரையை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு மற்றும் தகவல் பெறும் உரிமை சட்ட செயற்பாட்டாளர் ஹக்கீம், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் தம்புசாமி ஆகியோருடன் பேரூராட்சி அலுவலகம் சென்று அலுவலர் ராஜேந்திரன் முன்னிலையில், கலிமா நிஜாமுதீன் சுமார் 2 மணி நேரம் வருகைப் பதிவேடு, தீர்மான பதிவேடு, வரவு செலவு கணக்கு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தார்.