முகப்பு
திருவாரூர்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.67 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட

Updated On : 22 மே, 2018 at 12:52 AM
பகிர்:

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.67 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 137 மனுக்கள் அளிக்கப்பட்டன.
இம்மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.14 ஆயிரம் மதிப்பில் மூளை முடக்கு வாத சிறப்பு சக்கர நாற்காலிகள், 2 பேருக்கு ரூ.13 ஆயிரம் மதிப்பில் செயற்கை கால், செயற்கை கை, 2 பேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் காதொலி கருவி, மேலும் இருவருக்கு சுய தொழில் தொடங்க வங்கிக் கடன் மானியம், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான காசோலை என மொத்தம் 8 பேருக்கு ரூ.67 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தெய்வநாயகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) குருமூர்த்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.