திருவாரூர்

கஜா புயல்: திருவாரூர் மாவட்டத்தில் 12 பேர் சாவு

DIN

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் வீடு இடிந்தும், மரம் முறிந்து விழுந்ததிலும் 12 பேர் உயிரிழந்தனர்.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் நாகை-வேதாரண்யம் இடையே வியாழக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்தது. அப்போது, வீசிய சூறைக் காற்றால் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் வீட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூரை அடுத்த பைங்காட்டூர் வடக்குத் தெருவில் கோவிந்தராஜ் என்பவரது மனைவி பானுமதி (45) தனது கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் சுவர் இடிந்து அவர் மேல் விழுந்ததில் உயிரிழந்தார். இதேபோல், தென்பாதி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி பாக்கியமும் (65). தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். 
இவர்கள் இருவரது உடலையும் தலையாமங்கலம் போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவைச் சேர்ந்தவர் வீரமணி மகள் கீதர்சனா (இரண்டரை வயது). இவர், தனது தாயார் தனலெட்சுமியுடன் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் ஆஸ்பெட்டாஸ் சீட் விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த தனலெட்சுமி சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கும், பின்னர்  தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். 
இதேபால், பரவாக்கோட்டை வடக்கு அரிஜனத் தெருவைச் சேர்ந்த லெட்சுமி (80) சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். பரவாக்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த நகுலன் (70) என்பர் இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றபோது, அவர் மேல் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்தார். 
காஞ்சி குடிகாடு, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் முருகேசன் (38). இவர், கஜா புயலால் விழுந்த மரங்களை வெள்ளிக்கிழமை காலை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாம்பு கடித்து உயிரிழந்தார். கருவாக்குறிச்சி, தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரதாப் மகன் கணேசன் (10). இவர் வெள்ளிக்கிழமை காலை வெளியில் வந்து வேடிக்கை பார்த்தபோது அவர் மீது மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கஜா புயல் மழையில் சுவர் இடிந்து விழுந்ததில் உதயமார்த்தாண்டபுரம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த வேலு மகன் ராமையன் (48), ராஜகொத்தமங்கலத்தைச் சேர்ந்த சிதம்பரம் மகன் சின்னப்பன் (58), திருத்துறைப்பூண்டி நகர் அறிவான் தெருவைச் சேர்ந்த நாகமுத்து மகன் நாகராசன் (45) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த மூவரின் உடலையும் போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள கோயில்வெண்ணி தெற்கு அம்பலக்காரத் தெருவைச் சேர்ந்தவர் வீராச்சாமி மனைவி கனகவள்ளி (42). இவரது வீட்டின் கூரை கஜா புயலால் வெள்ளிக்கிழமை அதிகாலை சரிந்தபோது, கூரைக்கு முட்டுக்கொடுத்திருந்த சிமெண்ட் கட்டை கனகவள்ளியின் தலையில் விழுந்தது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று, கனகவள்ளியின் உடலை மீட்பு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த கனகவள்ளிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT