கோயில் கந்தன்குடி முருகன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்
கோயில் கந்தன்குடி முருகன் கோயிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேக பெருவிழாவையொட்டி யாகசாலைப் பந்தக்கால் முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோயில் கந்தன்குடி முருகன் கோயிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேக பெருவிழாவையொட்டி யாகசாலைப் பந்தக்கால் முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பேரளம் அருகில் உள்ள கோயில் கந்தன்குடி கிராமத்தில் புகழ்பெற்ற வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இந்த ஸ்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலம். இரண்டு அசுரர்களால் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு அழிவு ஏற்படும் என அன்னை பராசக்தி நினைத்த காரணத்தினால், தன்னுடன் வந்த குழந்தையான முருகனைத் தங்கி இருக்கும்படி கூறியதால், முருகன் தங்கிய இந்த ஸ்தலம், கந்தன்குடி என பெயர் பெற்று விளங்குகிறது. இந்த கோயிலில் முருகப் பெருமானை மணக்கோலம் கொள்ள, ஸ்ரீதேவசேனா அன்னை தவம் பூண்டு தென்திசை நோக்கி தனி ஆலயம் கொண்டு விளங்கி வருகிறார்.
தேவேந்திரன், ஐராவதம் என்று சொல்லக்கூடிய இரட்டை தந்தங்களுடைய வெள்ளை யானையை, தனது மகனின் தவத்தைக் காக்க கந்தன்குடிக்கு அனுப்பியதால், ஸ்ரீ முருகப் பெருமானுக்கு எதிரில் இங்கு ஐராவதம் வாகனமாக காட்சியளிப்பது தனி சிறப்பு. இவ்வாறு சிறப்புப் பெற்ற இந்த திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு விழா தை மாதம் 14 ஆம் நாள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனையொட்டி கும்பாபிஷேக பெருவிழாவின் ஆரம்பமாக, யாகசாலைப் பந்தக்கால் முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைவரும், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவருமான சி பி ஜி. அன்பு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் புகழேந்தி, திருக்கோயில் தக்கார் பா.பிரபாகரன், பேரளம் அறநிலையத்துறை ஆய்வாளர் பா.மாதவன், செயல் அலுவலர் மு.முருகையன், ஊராட்சி மன்றத் தலைவர் மேனாங்குடி பிரகாஷ், கோயில் மேலாளர் வள்ளிகந்தன், ஊராட்சி மன்ற உறுப்பினர் காந்திமதி, திருக்கண்ணங்குடி சர்வசாதகம் சிவாச்சாரியார் பி.கணேஷ் குமார், கோயில் அர்ச்சகர் ஜி.சங்கராத்மாஜ மற்றும் கிராம நாட்டாமை, முக்கியஸ்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.