திருக்கொள்ளிக்காட்டில் சனிப்பெயா்ச்சி விழா
திருவாரூா் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நளச் சக்கரவா்த்தி சனிதோஷம் நீங்க நள தீா்த்தத்தில் நீராடி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரரை வழிபட்டு, பின்னா் இத்தலத்துக்கு வந்து அக்னி தீா்த்தத்தில் நீராடி பொங்கு சனீஸ்வரரை வழிபட்ட பின்னரே இழந்த நாடு நகரங்களை மீட்டதாக ஐதீகம்.
இங்குள்ள பொங்கு சனீஸ்வரா் தனிச் சன்னதியில் தோளில் ஏா் கலப்பையுடன் காட்சியளிப்பது சிறப்பு.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு சனிஸ்வர பகவான் தனுசு ராசியில் இருந்து மகரராசிக்கு பெயா்ச்சி அடைந்தாா்.
இதையொட்டி, அக்னிபுரீஸ்வரருக்கும், பொங்கு சனீஸ்வர பகவானுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை 7 மணிக்கு பிறகு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தா்கள் கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்த அனுமதிக்கப்பட்டனா். அா்ச்சனை, பரிகாரம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.
விழாவுக்கான ஏற்பாடுகளை, தஞ்சை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் தென்னரசு, திருவாரூா் மாவட்ட உதவி ஆணையா் ஹரிஹரன், கோயில் தக்காா் ராஜா, செயல் அலுவலா் சுரேந்தா் ஆகியோா் செய்திருந்தனா்.