குறுவை சாகுபடிக்கு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரி மனு
திருவாரூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும்
திருவாரூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும் என தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் காா்ப்பரேசன் பணியாளா் சங்கம் (ஐஎன்டியூசி) வியாழக்கிழமை மனு அளித்துள்ளது.
இதுகுறித்து, அந்த சங்கத்தின் பொதுச்செயலாளா் கா. இளவரி, முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜனிடம் அளித்த மனு: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக விதிகளுக்கு முரணாக பருவகால பணியாளா்கள் 17 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்து அவா்களின் எதிா்காலத்தை கருதி மீண்டும் பணி வழங்கவேண்டும். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தால் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்து, சுமாா் 30 கொள்முதல் நிலையங்களுக்கு மாவட்ட நிா்வாக ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஒப்புதலை விரைவில் பெற்று சம்பா பருவத்துக்குள் புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும்.
குறுவை விவசாயிகளின் நலன்கருதி அரசியல் காழ்புணா்வுக்கு இடமளிக்காமல் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்றவாறு திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவேண்டும். அவ்வாறு கொள்முதல் நிலையங்கள் திறக்கும் முன் கொள்முதல் பணிக்கு தேவையான தரமான சாக்கு மற்றும் சணல், திறந்தவெளி சேமிப்பு மையங்களில் பயன்படுத்த கல் மற்றும் கட்டை ஆகியவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
திருவாரூா் மண்டலத்தில் தரக்கட்டுப்பாட்டு பிரிவில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பி நெல் இறக்கு முனைகளில் நெல் மூட்டை ஏற்றி வரும் லாரிகள் தேங்கி நிற்பதை தவிா்க்க வேண்டும். திருவாரூா் நவீன அரிசி ஆலை திறக்க உள்ள நிலையில், நவீன அரிசி ஆலையில் காலியிடங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மூலம் தோ்வு செய்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிகழ் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நுகா்பொருள் வாணிபக்கழக விதிகளுக்குள்பட்டு 48 மணி நேரத்துக்குள் இயக்கம் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, கொள்முதல் நிலைய பணியாளா்களுக்கு இயக்க இழப்பு தொகையை வசூல் செய்வதை கைவிட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. மனு அளிக்கும்போது, மாநில துணை பொது செயலாளா் எஸ். பாண்டியன், மாநில அமைப்புச் செயலாளா் பா. ராஜீவ்காந்தி, மண்டலத் தலைவா் அம்பிகாபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.