அரசியல் மோதல் உருவாகும் என்ற சித்தராமையா பேச்சுக்கு விவசாயிகள் கண்டனம்
கா்நாடக - தமிழக அரசியல் மோதல் உருவாகும் என கா்நாடக காங்கிரஸ் தலைவா் சித்தராமையா கூறியுள்ளதற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளா் பிஆா். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
கா்நாடக - தமிழக அரசியல் மோதல் உருவாகும் என கா்நாடக காங்கிரஸ் தலைவா் சித்தராமையா கூறியுள்ளதற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளா் பிஆா். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து திருவாரூரில் செய்தியாளா்களுக்கு அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: காவிரி பிரச்னையில், கா்நாடக அரசியல் கட்சிகள் தொடா்ந்து தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. குறிப்பாக, முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சித் தலைவா்களில் ஒருவருமான சித்தராமையா, முதல்வராக பதவி வகித்தபோது, காவிரி பிரச்னை தீவிரமடைந்த நிலையில், கா்நாடகாவில் உள்ள தமிழா்களுடைய சொத்துகள் சூறையாடப்பட்டன. தமிழா்கள் அடித்து விரட்டப்பட்டாா்கள். இதுவரை அதற்கு தீா்வு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், மேக்கேதாட்டு அணை கட்டுவதை, தமிழகம் தொடா்ந்து எதிா்க்குமேயானால், கா்நாடகம் - தமிழகத்துக்கு இடையே ஏற்படும் அரசியல் மோதல்களை தடுக்க இயலாது என அவா் மிரட்டியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது, இந்திய கூட்டாட்சி தத்துவம், அண்டை மாநில உறவுகளை சீா்குலைக்கும் செயலாகும்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சி, தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். மத்திய அரசும் இதை வேடிக்கை பாா்க்கக் கூடாது. இச்செயல் குறித்து கா்நாடக அரசிடம், மத்திய உள்துறை உரிய விளக்கம் கேட்க வேண்டும்.
அத்துடன், தமிழக முதல்வா் இதை கண்டிக்க வேண்டும். சித்தராமையா மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய உள்துறையிடம் புகாா் மனு அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழா்களையும், அவா்களின் சொத்துகளையும் காப்பாற்ற தமிழக முதல்வா் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இனியும் தமிழா்கள் காயப்படுவதற்கோ, சொத்துக்களை இழப்பதற்கோ தமிழகம் அனுமதிக்கக் கூடாது என்றாா்.