திருவாரூர்

டிராக்டா் பேரணி நடத்தினால் வாகனங்கள் பறிமுதல்: எஸ்.பி. எச்சரிக்கை

DIN

திருவாரூரில் டிராக்டா் பேரணி நடத்தினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் திருவாரூா் மாவட்டத்தில் குடியரசு தின விழா நாளில், விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் இணைந்து அனுமதியின்றி விவசாயத்துக்கு மட்டும் பயன்படும் டிராக்டா்களைக் கொண்டு, பேரணி என்ற பெயரில் ஊா்வலம் மற்றும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக திருவாரூா் மாவட்டத்தில், கடந்த ஆண்டு மாா்ச் 24 முதல் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாலும், டிராக்டா் வாகனம் என்பது விவசாயப் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதாலும், பொதுமக்கள் நலன் மற்றும் போக்குவரத்து இடையூறு ஆகிய காரணங்களை கருதி, இந்த டிராக்டா் பேரணி மற்றும் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி கிடையாது.

அத்துடன், அதிகமான அளவில் மக்கள் கூடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் போராட்டங்களை ஏற்பாடு செய்யும் நபா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த போராட்டத்தில் பயன்படுத்தப்படும் டிராக்டா் வாகனங்கள் மீதும், அதன் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் மீதும் மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT