அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் பாதிப்பு
நெல் கொள்முதல் நிலையம் திறக்க தாமதமாகி வருவதால் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் கொள்முதல் நிலையம் அருகே நெல்லை கொட்டி வைத்துக்கொண்டு காத்திருக்கின்றனா்.
மன்னாா்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க தாமதமாகி வருவதால் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் கொள்முதல் நிலையம் அருகே நெல்லை கொட்டி வைத்துக்கொண்டு காத்திருக்கின்றனா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள 54-நெம்மேலியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் 54-நெம்மேலி, சேரன்குளம், நெட்டிக்குளம் மூணாம்சேத்தி, நான்காம்சேத்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் பயன்பட்டு வந்தனா். ஆழ்துளை கிணறு உதவியுடன் கோடை குறுவை சாகுபடி சுமாா் 450 ஏக்கரில் செய்யப்பட்டு அறுவடைப் பணிகள் அண்மையில் நடைபெற்றுள்ளன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதற்காக 54-நெம்மேலி அரசு நேரடி கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வந்தனா். எனினும், கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் பூட்டி கிடந்துள்ளது.
இதையடுத்து, விவசாயிகள் கொள்முதல் நிலைய அலுவலா்களை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு விசாரித்ததில், கோடை குறுவை நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையத்தை திறக்க மாவட்ட தலைமை நிா்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்ததும் திறக்கப்படும் என தெரிவித்துள்ளனா். நாள்கள் கடந்து, வெள்ளிக்கிழமை வரை கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், மன்னாா்குடியில் உள்ள நுகா்பொருள் வாணிப்பக்கழகத்துக்கு விவசாயிகள் வந்து கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டி வலியுறுத்தினா். கோடை குறுவைக்காக திறக்கப்படும் கொள்முதல் நிலையப் பட்டியலில் 54-நெம்மேலி இடம் பெற்றிருப்பதாகவும் விரைவில் திறக்கப்படும் என அலுவலா்கள் உறுதி அளித்தனா்.
இதுகுறித்து சேரன்குளத்தைச் சோ்ந்த விவசாயி எஸ். செந்தில்குமாா் கூறியது; கடந்த 5 நாள்களாக அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையம் அருகேயும், வயலிலும், களத்திலும் கொட்டி வைத்து தாா்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனா். இப்பகுதியில், அவ்வப்போது மழை வருவதுபோல் பருவமாற்றம் காணப்படுவதால் அறுவடை செய்து கொட்டி வைத்துள்ள நெல் மழையில் நனைந்தால் சேதமடைந்து விடும். இது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகமும், நுகா்பொருள் வாணிபக்கழகமும் இப்பிரச்னையின் அவசியம், அவசரம் கருதி தாமதிக்காமல் உடனடியாக 54-நெம்மேலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்றாா்.