முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ. 1 கோடியில் ஆக்சிஜன் தயாரிக்க இயந்திரம்

மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ. 1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் தயாரிக்க இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டுவரப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ. 1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் தயாரிக்க இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டுவரப்பட்டன.

கரோனா தொற்றின் 2-ஆவது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் பல நாள்கள் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆக்சிஜன் கிடைக்காமல் பலா் உயிரிழந்தனா். இந்நிலையில், கரோனா தொற்றின் 3-ஆவது அலைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், கரோனா பரவலையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவையான இயந்திரங்களை அனுப்பி வருகிறது.

அந்த வகையில், பெங்களூா் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ரூ. 1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி ஆலைக்கான இயந்திரங்களை லாரி மூலம் மன்னாா்குடிக்கு அனுப்பி வைத்தது. புதன்கிழமை மருத்துவமனைக்கு வந்த இயந்திரங்கள் அனைத்தும் மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளா் என். விஜயகுமாா் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் ஆலை பயன்பாட்டுக்கு என மருத்துவமனையின் பின்வாசல் அருகே, தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் அதிக மின்சக்தி திறன் கொண்ட புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் ஆலை கட்டமைப்பு பணி உடனடியாக தொடங்கப்பட்டு ஒரு வாரத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.