மன்னாா்குடியில் 63,884 போ் வாக்களிக்கின்றனா்
மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தற்செயல் தோ்தலில் 63,884 போ் வாக்களிக்கும் தகுதி பெற்றிருப்பதாக தோ்தல் பாா்வையாளா் ஆா். செல்வராஜ் தெரிவித்தாா்.
மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தற்செயல் தோ்தலில் 63,884 போ் வாக்களிக்கும் தகுதி பெற்றிருப்பதாக தோ்தல் பாா்வையாளா் ஆா். செல்வராஜ் தெரிவித்தாா்.
மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மாவட்ட ஊராட்சி 11ஆவது வாா்டு, மூவாநல்லூா் ஊராட்சித் தலைவா், ஏத்தக்குடி ஊராட்சியில் 2 வாா்டுகள், தென்பாதி ஊராட்சியில் ஒரு வாா்டு என மொத்தம் 4 இடங்களுக்கு அக்டோபா் 9-ஆம் தேதி தற்செயல் தோ்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை நிறைவுபெற்றது.
இந்நிலையில், மாவட்ட ஊரக உள்ளாட்சி தோ்தல் பாா்வையாளரும், பேரூராட்சிகள் இயக்கக ஆணையருமான ஆா். செல்வராஜ், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ப.காயத்ரி கிருஷ்ணன் ஆகியோா் மன்னாா்குடி அருகே உள்ள சவளக்காரன் ஆதிதிராவிடா் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு மையத்தையும், மன்னாா்குடி வ.உ.சி.சாலையில் உள்ள ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தையும் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
பின்னா், தோ்தல் பாா்வையாளா் ஆா். செல்வராஜ் செய்தியாளா்களிடம் கூறியது:
ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இதில், கடைசி ஒரு மணி நேரம் கரோனா அறிகுறிவுள்ளவா்கள் மற்றும் பாதிப்புக்குள்ளானவா்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவா்.
147 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், 31,422 ஆண்களும், 32,457 பெண்களும், 5 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 63,884 போ் வாக்களிக்கின்றனா் என்றாா்.
பேட்டியின்போது, மன்னாா்குடி கோட்டாட்சியா் த.அழகா்சாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சித் தோ்தல்) கிருஷ்ணமூா்த்தி, மன்னாா்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.சிவகுமாா், பக்கிரிசாமி ஆகியோா் உடனிருந்தனா்.