திருவாரூர்: திருவிடைமருதூரைச் சேர்ந்த கலியபெருமாள் மனைவி வனஜா (69) என்பவர் தனது ஒரு மாத ஓய்வூதியத்தை ராணுவ வீரர்களுக்கு அளிப்பதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் அளித்தார்.
சுதந்திர நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அமைதியின் சின்னமான புறாவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பறக்க விட்டனர்.
மேலும் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல்துறை வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி துறை, சுகாதாரத்துறை, மருத்துவ துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த 81 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், முன்னாள் படைவீரர் நலத்துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மூலம் 983 பயனாளிகளுக்கு ரூ.4,18,88,383 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும் திருவிடைமருதூரைச் சேர்ந்த கலியபெருமாள் மனைவி வனஜா (69) என்பவர் தனது ஒரு மாத ஓய்வூதியத்தை ராணுவ வீரர்களுக்கு அளிப்பதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் அளித்தார். கலியபெருமாள் ஆடுதுறையில் வேளாண்மை துறையில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது 78 வயதில் உயிரிழந்துள்ளார். அவரது இறப்புக்கு பிறகு ஓய்வூதியத் தொகை அவரது மனைவியான வனஜாவிற்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தனது ஒரு மாத ஓய்வூதியமான ரூ. 15,000 ராணுவ வீரர்களுக்கு அளிக்க வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கில், திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார் வனஜா.
இதையும் படிக்க: திருவாரூரில் கொடிக் கம்பம் சேதம்: காவல்துறை விசாரணை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள வளநாடு பகுதியில் பிறந்தவர் வனஜா என்பதால், தனது சொந்த மாவட்டத்தில் இதை வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் இதனை அளித்ததாக வனஜா தெரிவித்தார். அவர் அந்த பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கும் போது அனைவரும் கையொலி எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.