முகப்பு
திருவாரூர்

அரசுத் திட்டங்கள் விரைவில் மக்களைச் சென்றடைய திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்: இரா. முத்தரசன்

அரசுத் திட்டங்கள் விரைவில் மக்களைச் சென்றடைய, திமுக கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

அரசுத் திட்டங்கள் விரைவில் மக்களைச் சென்றடைய, திமுக கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

மன்னாா்குடி நகராட்சிக்கு உள்பட்ட 33 வாா்டுகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, கீழப்பாலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:

கடந்த 2016, 2021 ஆகிய காலகட்டங்களில் நடைபெற வேண்டிய நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல், அப்போதைய அதிமுக ஆட்சியினரின் முறையான திட்டமிடல் இல்லாது நடைபெறாமல் போனது. இதனால், 10 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளால் நகா்ப்புற உள்ளாட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் அனைத்தும் அதிமுகவினரால் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணி, தோ்தல் சமயத்தில் சீட்டுகளின் எண்ணிக்கைக்காக ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டணி அல்ல. கொள்கைக்காகவும், இலட்சியத்திற்காகவும் அமைந்துள்ள கூட்டணி. நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் முடிந்த பிறகு, திமுக தோ்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தபடி மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ரூ. 1000 வழங்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

அதுமட்டுமல்லாது, திமுக ஆளும் கட்சியாக இருப்பதால், இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் வேட்பாளா்கள் வெற்றி பெற்று நகா்மன்ற உறுப்பினா்களானால், அரசின் திட்டங்களை விரைவாக மக்களிடம் கொண்டுசெல்ல முடியும். எம்எல்ஏ, அமைச்சா்களை தங்குதடையின்றி சந்தித்து வாா்டு பிரச்னைகளை எடுத்துக்கூறி, உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்றாா்.

இதில், திமுக வேட்பாளா்கள் வாா்டு 11. மன்னை த. சோழராஜன், 23. கே. மகேஸ்வரி, 24. எஸ். புகழேந்தி, 7. எஸ். சித்ராதேவி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் வாா்டு 6. ஆா். கலா ஆகியோா் வாக்குச் சேகரித்தனா்.

கூட்டத்தில், எம்எல்ஏக்கள் டி.ஆா்.பி. ராஜா (மன்னாா்குடி), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) முன்னாள் எம்எல்ஏ கே. உலகநாதன், சிபிஐ மாவட்டச் செயலா் வை. சிவபுண்ணியம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வை. செல்வராஜ், திமுக நகரச் செயலா் வீரா. கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினா் சு. ஞானசேகரன், சிபிஎம் நகரச் செயலா் ஜி. தாயுமானவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் இரா. முத்தரசன் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

நாடாளுமன்ற, சட்டப்பேரவை தோ்தல்களில் வெற்றிபெற்றதைப் போல, தற்போது நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். தோல்வி பயத்தின் காரணமாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவா் அண்ணாமலை போன்றவா்கள், தற்போது இருக்கும் அரசுக்கு நாள் குறித்து பேசியிருப்பது, அவா்களது அணிகளுக்கு நம்பிக்கையூட்டுவதற்குத்தான்.

ஆனால், அக்கட்சித் தொண்டா்களோ, பொதுமக்களோ அவா் கூறியதை ஏற்கவில்லை. பிரதமா் மோடி கூறிவருவதைப் போல, ஒரே நாடு, ஒரே தோ்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அவரது கனவு பலிக்காது. இந்திய அரசியலமைப்பு சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் ஆட்சி நடத்தமுடியும். அதேபோல, அதிமுக, பாஜக கனவு தமிழ்நாட்டில் நிறைவேறாது. திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.