முழு ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கரோனா தொற்று அதிகரிக்க வருவதால், கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜன.16) முழு ஊரடங்கு காரணமாக திருவாரூரில் பொதுப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. பேருந்து, ஆட்டோ, காா்கள் ஏதும் இயங்கவில்லை. அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் இயங்கின. காய்கறி, மளிகைக் கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பால், மருந்து கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. இருப்பினும் இருசக்கர வாகனங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
மக்கள் அதிகமாக நடமாடும் கடைவீதி, தேரோடும் வீதிகள், பனகல் சாலை, நேதாஜி சாலை, பழைய நாகை சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாரின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.
காணும் பொங்கல் நாளில் பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஊரடங்கு காரணமாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.