முகப்பு
திருவாரூர்

ஆவடி அருகே கிடப்பில் கிடக்கும் சாலைப் பணி: பொதுமக்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு

ஆவடி மாநகராட்சிக்கு உள்பட்ட பட்டாபிராமில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணியை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உள்பட்ட பட்டாபிராமில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணியை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சி, 20-வது வார்டில் பட்டாபிராம் அருகே வெங்கடாபுரம் உள்ளது. இங்குள்ள பிரதான சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் மூலம் கடந்த ஜனவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. இதன்பின்பு கடந்த மார்ச் மாதம் தோண்டப்பட்ட சாலையில் கருங்கற்களை கொட்டி பணிகள் நடந்தது. அதன் பிறகு இந்த சாலைப் பணிகள் கிடப்பில் போட்டதாக பொதுமக்கள் ஆவடி மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். 

இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து ஆத்திரமடைந்த வெங்கடாபுரத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை  திரண்டனர். 

பின்னர் அவர்கள் பட்டாபிராம்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையின் குறுக்கே டிராக்டரை நிறுத்தியும், தடைகளை போட்டும் வாகனங்களை செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தகவலறிந்து திருநின்றவூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் மாநகராட்சி உதவி பொறியாளர் சத்தியசீலன் தலைமையில் அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் சாலையை அமைத்து  கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். 

இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலையை அமைக்க கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தினால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.