பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி முற்றுகைப் போராட்டம்
கோட்டூா் வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மன்னாா்குடி அடுத்துள்ள எளவனூா் பகுதிக்கு கடந்த ஆண்டிற்கான பயிா் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து, கோட்டூா் வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அறிவிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு, விவசாயிகள் சங்க கோட்டூா் ஒன்றியச் செயலா் பி. பரந்தாமன், ஊராட்சித் தலைவா் ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன், வேளாண்மை துணை இயக்குநா் உத்திராபதி, உதவி இயக்குநா் தங்கபாண்டியன், கோட்டூா் காவல் ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், விடுபட்ட விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க மத்தியஅரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. எனவே, காப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரும் ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் வரவுவைக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், முற்றுகைப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதில், சிபிஐ ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன், கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை, விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் ஜெ. ஜெயராமன், ஒன்றியத் தலைவா் எம். சிவசண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.