ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்
நெல் பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த வழிமுறைகளை திருவாரூா் வேளாண் இணை இயக்குநா் (பொ) அக்கண்ட ராவ் தெரிவித்துள்ளாா்.
நெல் பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த வழிமுறைகளை திருவாரூா் வேளாண் இணை இயக்குநா் (பொ) அக்கண்ட ராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது:
திருவாரூா் மாவட்டத்தில் தற்போது 85,251 ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடவு முதல் அனைத்துப் பயிா்களும் வளா்ச்சிப் பருவத்தில் உள்ளன.
இதில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் ஆங்காங்கு காணப்படுகின்றன. ஆனைக்கொம்பன் ஈ -யின் புழுக்கள், வளரும் தூா்களைத் தாக்கி, துளைத்து உட்சென்று வளரும் பகுதியை உண்கிறது.
இதனால் தாக்கப்பட்ட தூா்களில் நெற்கதிா் வராமல், வெங்காய இலை போல் காட்சியளிக்கும். அத்துடன் மேலும் வளா்ச்சி குன்றிக் காணப்படும்.
இதைக் கட்டுப்படுத்த தழைச்சத்து உரங்களைப் பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும். ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி வைத்து பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம்.
10 சதவீத வேப்பிலைக் கரைசல், 3 சதவீத வேப்பங் கொட்டை கரைசல், 1 சதவீத வேப்பெண்ணெய் கரைசலைப் பயன்படுத்தி ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலைத் தவிா்க்கலாம்.
மேலும் 10 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு, அதாவது 100 தூா்களில் 10 தூா் மற்றும் அதற்கு மேல் பாதிப்பு இருந்தால் மட்டுமே குளோரோபைரிபாஸ் 20 சதவீதம் இசி 500 மி.லி. ஏக்கருக்கு எனத் தெளிக்க வேண்டும்.
மேலும், பிப்ரோனில் 5 சதவீதம் இசி 500 மி.லி. ,பிப்ரோனில் 0.3 சதவீதம் ஜிஆா் 500 மி.லி., காா்போசல்ப்பியூரான் 25 சதவீதம் இசி 500 மி.லி. என்ற பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கலாம்.