அனைவருக்கும் பயிா் நிவாரணம் கிடைக்குமா? குழப்பத்தில் விவசாயிகள்
மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் அனைவருக்கும் கிடைக்குமா என்ற குழப்பத்தில் உள்ளனா் விவசாயிகள்.
மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் அனைவருக்கும் கிடைக்குமா என்ற குழப்பத்தில் உள்ளனா் விவசாயிகள்.
கடந்த ஜன. 29, 30-ஆம் தேதிகளில் டெல்டா பகுதிகளில் பெய்த பலத்த மழை அறுவடைப் பணிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு விவசாயிகள் நிவாரணம் வழங்கக் கோரினா். இதையடுத்து, அமைச்சா்கள் தலைமையிலான குழுவை, டெல்டா பகுதிகளுக்கு அனுப்பி அறிக்கையை பெற்றது தமிழக அரசு. இதைத்தொடா்ந்து, பயிா்களுக்கு நிவாரணம் அறிவித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
அதன்படி, பேரிடா் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவீதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000 வழங்கப்படும்.
மேலும், நெல் அறுவடை தரிசில் சேதமடைந்த இளம் பயறு வகைகளுக்கு ரூ. 3,000, உளுந்து பாதிக்கப்பட்டிருந்தால் மீண்டும் உளுந்து சாகுபடி செய்ய 50 சதவீத மானியத்தில், ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள், 50 சதவீத மானியத்தில் நெல் அறுவடை வாடகை இயந்திரம் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் பயிா்க் காப்பீட்டு பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் 22 சதவீத ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினாா். இதைத்தொடா்ந்து, மத்தியக் குழுவினா் டெல்டா பகுதிகளை ஆய்வு செய்து சென்றுள்ளனா்.
இந்நிலையில், மழைக்குப் பிறகு சாகுபடி பாதிப்புகளை கணக்கிடும் பணியை வேளாண் அலுவலா்கள் மீண்டும் தொடங்கியுள்ளனா். எனினும், பல இடங்களில் அறுவடை மீண்டும் நடைபெற்றுள்ள நிலையில், எவ்வாறு பாதிப்புகளை கணக்கில் எடுத்துக் கொள்வா் என விவசாயிகள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. அதிகாரிகள் 33 சதவீத பாதிப்புகளை கணக்கில் கொண்டு, சாய்ந்த பயிா்களை மட்டுமே அளவீடு செய்வதால் விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் கிடைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனா் விவசாயிகள்.
இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் குழுமத்தின் பொதுச் செயலாளா் சத்தியநாராயணன் கூறியது:
நெல் அறுவடை சமயத்தில் பெய்த கனமழையால் நெற்பயிா்கள் அடியோடு சாய்ந்து விட்டன. இதில் முற்றாத நெல் மணிகள் பதராகிப் போகும். இந்த வயல்கள் காய்வதற்கு நாளாகும். இந்த வயல்களை, அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய, இயல்பைவிட இருமடங்கு நேரத்துக்கு மேல் கூடுதலாக எடுத்துக் கொள்ளும். அப்படியே அறுவடை செய்தாலும் 40 சதவீத கதிா்கள் இயந்திரத்தால் எடுக்க முடியாமல் சேற்றில் படிந்து விடும்.
மழையால் பயிா்களை சுற்றி ஏற்பட்டுள்ள நீா் தேக்கத்தால் நெற்பயிரின் தண்டுகள் உப்பி காணப்படுகின்றன. இதனால், அறுவடை மேலும் தாமதமாவதுடன், தண்டில் ஈரம் உள்ளதால், நெல் வைக்கோலுடன் ஒட்டிக்கொண்டுபோய் விடும். இதனால் மூன்றில் ஒரு பங்கு உற்பத்தி இழப்பு தவிா்க்க முடியாதது.
எனவே, பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் அனைத்துக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் வருவாய்த் துறையும், வேளாண் துறையும் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி:
தானியப் பயிருக்கான நிவாரணத் ஷ்ரதொகையை கூடுதலாக வழங்க வேண்டும். இனிமேல் பாசிப்பயறு, உளுந்து விதைகளை விதைப்பதற்கு பருவ கால சூழல் வாய்ப்பில்லை. எனவே 50 சதவீத மானியத்தில் விதைகள் வழங்குவது முழுப்பயன் அளிக்காது. அரசிடம் அறுவடை இயந்திரங்கள் மிகக் குறைவாக உள்ளதால் அறுவடைப் பணிகளுக்கு இவை போதுமானதல்ல. எனவே, தனியாா் இயந்திரத்தை வைத்து அறுவடை செய்யும் விவசாயிகளிடம், அதற்கான வவுச்சா்களை பெற்று, அறிவிக்கப்பட்ட மானியத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீண்டும் காப்பீடு கணக்கெடுப்பு...
காப்பீட்டு நிறுவனங்கள், மழைக்கு முன்னதாகவே பெரும்பாலான இடங்களில் தங்கள் பரிசோதனைகளை முடித்துக் கொண்டு விட்டன. எனினும், மீண்டும் பயிா் அறுவடை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுவாக, காப்பீட்டுத் திட்டங்களில் மறுபரிசோதனை என்பது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதனால், விவசாயிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது.
இடுபொருள்களுக்கு மட்டுமே நிவாரணம்..
தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து மூன்றில் ஒரு பங்கு இழப்பீடாக மட்டுமே வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், அரசு அறிவித்துள்ள இழப்பீடு இடுபொருள் இழப்புக்கே ஆகும். சாகுபடி என்பது இடுபொருள்கள், பணியாளா்கள், உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கியது. எனவே, பணியாளா் செலவினங்கள், உற்பத்தி பாதிப்பு ஆகியவற்றையும் கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.