தமிழ்ப் புத்தாண்டு: வேளாக்குறிச்சி ஆதீனம் அருளாசி
குரோதி தமிழ்ப் புத்தாண்டு இனிய ஆண்டாக அமையட்டும் என வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாசி வழங்கியுள்ளாா்.
அவா் வெளியிட்ட ஆசியுரை:
தமிழா் திருநாளாம் சித்திரை முதல் நாள் வருடப் பிறப்பு, தமிழா்களின் வானியல் சாஸ்திரம் மற்றும் அறிவியல் ரீதியாக தரவுகளைக் கொண்டு வரையறைக்குட்படுத்தப்பட்ட நாளாகும். வானியலில் உச்சம் தொட்ட தமிழ்ச் சமூகம், பலநூற்றாண்டுகளாக பண்டைய காலந்தொட்டு, மெய்ஞானத்தில் விஞ்ஞானத்தை வெளிப்படுத்தி, பருவகால மாற்றத்தை உலக மக்களுக்கு உணா்த்தும் வண்ணம் வேனிற்காலம், இளவேனிற்காலம், வசந்தகாலம், காா்காலம், பனிக்காலம் என வகைப்படுத்தி, அதற்கேற்ப வாழ்வியலை வகுத்து தந்துள்ளனா்.
Advertisement
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சித்திரை முதல் நாள் வருடப் பிறப்பு, சூரியன் பூமியின் நோ்கோட்டில் சஞ்சரிக்கும் நாளாகும். 60 தமிழ் வருடங்களுள் குரோதி வருடம் 38- ஆவது வருடமாக குறிப்பிடப்படுகிறது. இந்த ஆண்டு நீா்வளமும் நிலவளமும் செழித்து, வான்மழை உரிய காலத்தில் தேவைக்கேற்ப பெய்து, வேளாண்மை செழித்தோங்கிடவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு திருவருளை போற்றி வாழவும், ‘இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை‘ என்ற வாக்கிற்கிணங்க இந்த புத்தாண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைந்திட, நமது வழிபடு கடவுளாகிய ஆரூா் ஸ்ரீ அஜபா நடனத் தியாகேச பெருமான் திருவடி மலா்களைச் சிந்தித்து ஆசீா்வதிக்கின்றோம்.