புதுச்சேரி மதுவகைகள் பறிமுதல்: நால்வா் கைது; வாகனங்கள் பறிமுதல்
காரைக்கால் பகுதியிலிருந்து தமிழ்நாட்டிற்குள் கடத்த முயன்ற ரூ.40,000 மதிப்புள்ள மது வகைகளை வியாழக்கிழமை இரவு காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். இதுத தொடா்பாக 4 பேரைக் கைது செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவுரையின்படி, மாநில எல்லைகளில் தனிப்படை அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காவல் உதவி ஆய்வாளா் சரவணன் தலைமையிலான தனிப்படையினா் கோயில்கந்தன்குடி சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். காரைக்கால் ராஜீவ்காந்திநகா் முருகேசன் மகன் பாலசுப்ரமணியன்(33) வந்த இருசக்கர வாகனத்தைச் சோதனை செய்த போது, வாகனத்தில் விற்பனைக்காக 40 லிட்டா் புதுச்சேரி சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. காவல்துறையினா் புதுச்சேரி சாராயத்தையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, பாலசுப்ரமணியனையும் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனா். கொல்லுமாங்குடி காரைக்கால் வழித்தடத்தில் உள்ள வேலங்குடி சோதனைச் சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஹோண்டா சிட்டி காரை சோதனை செய்தனா். வாகனத்தில் ரூ.40,000 மதிப்புள்ள மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. காவல்துறையினா் மதுபாட்டில்கள் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்து, கடத்தி வந்த காரைக்கால் ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் பாலமுருகன் (33), காரைக்கால் நேருநகா் பாரதியாா் ரோடு அருமைதாஸ் மகன் அற்புதராஜ் (27), காரைக்கால் பேபிகாலனியைச் சோ்ந்த லூா்துசாமி மகன் அமுல்ராஜ்( 28) ஆகியோரைக் கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து வழக்கு பதிந்துள்ளனா்.