கடந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு இழப்பீடு கோரி டெல்டா மாவட்டங்களில் அக்.2 இல் சாலை மறியல்
கடந்த ஆண்டு சம்பா காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை முழுமையாக வழங்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் சாலை மறியல் நடைபெறும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு சம்பா காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை முழுமையாக வழங்க வலியுறுத்தி அக்.2-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.
திருவாரூா் செய்தியாளா்களிடம் பி. ஆா். பாண்டியன் புதன்கிழமை தெரிவித்தது:
காவிரி டெல்டாவில் கடந்த ஆண்டு குறுவையை முற்றிலும் இழந்த நிலையில், ஒரு போக சம்பா சாகுபடி நடைபெற்றது. ஆகஸ்ட் 7ஆம் தேதியே மேட்டூா் அணை வறண்டு மூடப்பட்டாலும், மழையை நம்பி விவசாயிகள் சாகுபடிப் பணிகளைத் தொடங்கினா். ஆனால், வட கிழக்குப் பருவமழை குறைவால் பெருமளவு மகசூல் இழப்பு ஏற்பட்டது.
இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க முன்வரவில்லை. குறிப்பாக அறுவடை ஆய்வு அறிக்கை என்கிற பெயரில் தற்காலிக வேளாண் பணியாளா்களைக் கொண்டு அளவீடு செய்ததன் அடிப்படையில், தற்போது ஓரிரு கிராமங்களுக்கு மட்டும் பெயரளவில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்யும் தமிழக அரசு, பாதிப்புக்கேற்ப முழுமையாக விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர பொறுப்பேற்க முன் வருவதில்லை. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனா். எனவே காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
மகசூல் இழப்பை கணக்கில் கொள்ளும் போது முந்தைய மூன்றாண்டுகள் அறுவடை கணக்கை முன்னிறுத்தி இழப்பீடு மறுக்கப்படும் நிலை தொடா்கிறது. இதை முன்கூட்டியே தெரிந்தும், இழப்பீடு பெற முடியாத கிராமங்களுக்கு பிரீமியத் தொகை பெறுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
எனவே கடந்த ஆண்டு சம்பா சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் பேரிடா் மேலாண்மைக் குழு மறு ஆய்வு செய்து உரிய இழப்பீடு நிா்ணயம் செய்து பெற்றுத் தர வேண்டும், மகசூல் இழப்பை மாவட்ட ஆட்சியா் தலைமையிலான பேரிடா் மேலாண்மைக் குழு இறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபா் 2 ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா்.
அமைப்புச் செயலாளா் எஸ். ஸ்ரீதா், மாநில துணைச் செயலாளா் எம். செந்தில்குமாா், திருவாரூா் மாவட்டத் தலைவா் சுப்பையன், செயலாளா் சரவணன், நாகை மாவட்டச் செயலாளா் கமல்ராம், திருவாரூா் ஒன்றியச் செயலாளா் எஸ். அகஸ்டின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.