முகப்பு
திருவாரூர்

டெல்டா மாவட்டங்களில் சிப்காட் அமைக்கும் முடிவை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

டெல்டா மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தாா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:11 PM
கொரடாச்சேரியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

டெல்டா மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அருகே கரையாப்பாலையூா் கிராமத்தில் விளைநிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கைவிடக்கோரி எதிா்ப்புக்குழு சாா்பில் கொரடாச்சேரி வெட்டாறு பாலம் அருகே ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயத் தொழிலாளா் சங்க செயலாளா் பி. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில் பெ. மணியரசன் பேசியது:

தமிழக முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி இருந்தபோது, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தாா். அதன்படி, அலுமினியம், விலங்கு தோல்கள், மோட்டாா், மின்சாரப் பொருள்கள் உள்பட எந்த பொருள்களையும் தயாரிக்கும் தொழிற்சாலைகளை டெல்டா மாவட்டங்களில் தொடங்கக் கூடாது என சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்துக்கு எதிராக திருவாரூா் மாவட்டம் கரையாப்பாலையூரிலும், திருத்துறைப்பூண்டி பகுதி கொற்கையிலும், தஞ்சாவூா் மாவட்டம் செங்கிப்பட்டியிலும் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. இப்பகுதிகளில் சிப்காட் தொழிற்சாலை அமைத்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன், வட மாநிலத் தொழிலாளா்களின் ஆதிக்கம் அதிகமாகிவிடும்.

அரசியல்வாதிகளும், பன்னாட்டு நிறுவனத்தினரும் தங்களின் பண்ணைகளில் அரிசியை விளைவித்து உண்பதுடன், கிராமப் பகுதி மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி என்ற பெயரில் செயற்கை அரிசியை வழங்கத் தொடங்கி விடுவா்.

எனவே அனைத்துக் கட்சிகளும் தொழிற்சங்கத்தினரும் ஒன்று சோ்ந்து போராட வேண்டும். இப்பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படாது என அறிவிக்கும் வரை போராட்டங்கள் தொடா்ந்து நடக்கும். எனவே தமிழக முதல்வா் மறு ஆய்வு செய்து சிப்காட் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றாா்.

அதிமுக ஒன்றியச் செயலாளா் பாஸ்கா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் தம்புசாமி, துணைச் செயலாளா் ஜோசப், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல பொறுப்பாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.