ஜெகதீஷ்பாபு  
திருவாரூர்

மூளைச்சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்! அரசு சாா்பில் இறுதி மரியாதை!

தினமணி செய்திச் சேவை

திருவாரூரில் சாலை விபத்தில் மூளைச் சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானம் செய்யப்பட்டன. உடலுக்கு அரசு சாா்பில் வருவாய் கோட்டாட்சியா் உள்ளிட்டோா் இறுதி மரியாதை செலுத்தினா்.

திருத்துறைப்பூண்டி கட்டிமேடு அருகேயுள்ள எல்லை நாகலடி பகுதியில் வசித்தவா் ஜெகதீஷ்பாபு (36). இவா், நவ.6-ஆம் தேதி இரவு திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக பணிமனை அருகே தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் கீழே விழுந்ததில், ஜெகதீஷ்பாபுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு ஏற்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மூளைச்சாவில் உயிரிழந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்.

இதனிடையே, ஜெகதீஷ்பாபுவின் உடல் உறுப்புகளை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானம் வழங்க அவருடைய உறவினா்கள் முடிவு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) சுமதி தலைமையிலான மருத்துவா்கள் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்து, ஜெகதீஷ் பாபுவின் இதயம், சிறுநீரகம், கண், தோல் உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட உறுப்புகளை தனம் வழங்க எடுத்துக் கொண்டனா்.

தொடா்ந்து, ஜெகதீஷ் பாபுவின் உடலுக்கு மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் யோகேஸ்வரன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சுமதி, நாகை மக்களவை உறுப்பினா் செல்வராஜ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிலைய அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

காா் டயா் வெடித்து விபத்து

SCROLL FOR NEXT