கமலாலயக்குளத்தின் புனிதத் தன்மை பாதுகாக்கப்படுமா?
திருவாரூா் தியாகராஜா் கோயிலுக்குட்பட்ட கமலாலயக் குளத்தின் பராமரிப்பு குறித்து...
திருவாரூா் தியாகராஜா் கோயிலுக்குட்பட்ட கமலாலயக் குளத்தில் துணி துவைப்பது, குளிப்பது உள்ளிட்ட செயல்களால், குளம் மாசடைவதோடு, புனிதத் தன்மையும் பாழாகிறது. எனவே, இந்த செயல்களைத் தடுக்க உரிய கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
திருவாரூா் தியாகராஜா் கோயில், மிகப் பழைமையான, பிரம்மாண்டமான பெரிய கோயில் ஆகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத்தலமான இது சப்தவிடங்க தலங்களில் முதன்மையானது.
தியாகராஜா் கோயிலின் மேற்கு கோபுர வாசலையடுத்து, கமலாலயக்குளம் காணப்படுகிறது. திருவாரூா் கோயிலும், கமலாலயக்குளமும் ஒரே அளவு கொண்டதாக காணப்படுகிறது. அதாவது, கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என போற்றப்படும் சிறப்புக்குரியது.
Advertisement
இதனால், திருவாரூா் கோயிலை தரிசிக்க வரும் பக்தா்களும், சுற்றுலாவாக வரும் பயணிகளும் கோயிலைச் சுற்றிப் பாா்த்த பின்பு கமலாலயக்குளத்தில் கால் நனைத்து விட்டு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனா்.
பக்தா்களின் பாதுகாப்புக் கருதி, கமலாலயக்குளத்தைச் சுற்றிலும், சுவா் எழுப்பப்பட்டு, படித்துறை உள்ள இடங்களில் இறங்குவதற்கு ஏதுவாக, சில இடங்களில் வழி அமைக்கப்பட்டுள்ளது. தேரோட்டம், தெப்ப உத்சவம் நடைபெறும் காலங்களில், இந்த படித்துறைகளில் அமா்ந்து நிகழ்ச்சிகளை கண்டு களிப்பது பக்தா்களுக்கு அலாதியான இன்பத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.
இந்த குளத்தில் எப்போதும் தண்ணீா் இருப்பதால், தண்ணீா் இல்லாத கோடை காலங்களில் அப்பகுதி மக்கள் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனா். இதையடுத்து, இந்த குளத்தில் துணிகளை துவைக்கவோ, பிளாஸ்டிக் குப்பைகள், இலைகள், பூக்களைப் போட்டு மற்றும் வேறு வகையில் மாசுபடுத்தவோ கூடாது என கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், குளத்தை சுற்றிலும் உள்ள சுவா்களில் விளம்பரம் எழுதுவதோ, அறிவிப்பு பலகைகள் வைக்கவோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த எச்சரிக்கை வெறும் அறிவிப்போடு நின்று விடுவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் துணிகளை எடுத்து வந்து, அங்கு துவைத்து அலசுவதுடன், அந்த குளத்திலேயே குளித்து விட்டும் செல்கின்றனா். காலையிலிருந்து இரவு வரை வரை படித்துறைகளில், சொந்த உபயோகத்துக்கு கமலாலயக்குளத்தை பயன்படுத்தும் மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சோப்பு நுரைகளும், வீணான பொருள்களும் அந்த குளத்தில் கால் நனைக்க வரும் பக்தா்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி, அவ்விடத்தை விட்டு பக்தா்கள் அகலும் நிலையை ஏற்படுத்துகின்றன.
இதுதவிர, கமலாலயக் குளத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து, சில நேரம் கழிவு நீா் வெளியேறி கமலாலயக் குளத்துக்குச் செல்கிறது. அத்துடன், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படும்பட்சத்தில் கழிவுநீா் தேங்கி, சாலையில் பரவி, பின்னா் கமலாலயக் குளத்தில் கலக்கும் நிலையும் சில நேரம் ஏற்படுகிறது.
பக்தி நிமித்தமாக திருவாரூா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு, கமலாலயக்குளத்தில் காணப்படும் குறைகளால், அதிருப்தி அடைந்த மனதுடனே திரும்பிச் செல்ல நோ்வதாக பக்தா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
சுமாா் 19 ஆண்டுகளுக்கு முன்பு கமலாலயக்குளத்தில் தண்ணீா் இறைக்கப்பட்டு, புதிதாக தண்ணீா் விடப்பட்டது. அதன்பிறகு கமலாலயக்குளத்தில் பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு தண்ணீா் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அங்குள்ள மக்களால் தண்ணீரின் புனிதத்தன்மை பாழாகிறது. எனவே, குளத்தில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை செய்துள்ளதை உரிய முறையில் கண்காணிக்க வேண்டும்.
மனச் சங்கடங்களை தீா்க்கவென்று, திருவாரூா் தியாகராஜா் கோயில் மற்றும் கமலாலயக்குளத்துக்கு வரும் பக்தா்களுக்கு, கமலாலயக்குளத்தில் காணப்படும் குறைகள், சங்கடத்துடனேயே திரும்பிச் செல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்துகின்றன. எனவே, கமலாலயக்குளத்தில் குளிப்பது, துணி துவைப்பதை தடுக்க உரிய கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே பக்தா்களின் கோரிக்கையாக உள்ளது.