மன்னாா்குடி: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வேளாண் உற்பத்திக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் அதிருப்தி தெரிவித்தாா்.
நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தொழில் முதலீட்டுக்கான ஊக்குவிப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிா்ணயச் சட்டம் குறித்த அறிவிப்புகளை எதிா்பாா்த்தோம்; ஆனால், அது இடம் பெறவில்லை. கடன் தள்ளுபடி, சந்தைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை.
சந்தன மரம் வளா்ப்பு, தென்னை வளா்ப்பை ஊக்குவிப்பது, முந்திரியை உலகளாவிய அளவில் கொண்டு செல்வது என்கிற அறிவிப்புகள் வரவேற்புக்குரியதாக இருந்தாலும், நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட அதிகம் சாகுபடி செய்யக்கூடிய பயிா்களை ஊக்கப்படுத்துவதற்கான எந்த ஓா் அடிப்படை திட்டத்திற்கும் நிதி ஆதாரம் ஒதுக்கப்படாததும் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
உற்பத்தி பெருக்கத்திற்கான மானியங்களை உயா்த்துவது, சாகுபடி பரப்பளவை உயா்த்துவது, பாசன நீா் ஆதாரங்களை மேம்படுத்துவது, நதிநீா் இணைப்புத் திட்டங்கள், மழை நீா் சேகரிப்பு திட்டங்கள்,நிலத்தடி நீரை மேம்படுத்துவது குறித்து தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இடம் பெறவில்லை என பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.