திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் சம்பா சாகுபடி அறுவடை பணி 21 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றாா் தமிழக அரசின் கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசு செயலாளா் கே.எஸ். பழனிசாமி.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சம்பா நெல் கொள்முதல் பணிகள் குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசியது: மாவட்டத்தில், சம்பா நெல் கொள்முதல் பணிகளுக்காக 540 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போதுவரை 1,06,933 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 66,813 மெ.டன் நெல் பாதுகாப்பாக இயக்கம் செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் தீவிரமடைந்துள்ளதால் நாள்தோறும் சராசரியாக 10,000 மெட்ரிக் டன்னுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 1,45,991 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இதுவரை 31,218 ஹெக்டேரில் அதாவது 21 சதவீதம் அறுவடை நிறைவு பெற்றுள்ளது. இதுவரை 16,195 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனா். அவா்களுக்கு தாமதமின்றி 2 நாள்களுக்குள் பணப்பட்டுவாடா இசிஎஸ் மூலம் ரூ.269.98 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மட்டுமே நெல் பெறப்படும். விவசாயி அல்லாதவா்கள் போலியான ஆவணங்களை பயன்படுத்தி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதை தடை செய்ய மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்த நெல் உடனுக்குடன் இயக்கம் செய்யவும், விவசாயிகளுக்கு உடனுக்குடன் தொகையை பட்டுவாடா செய்யவும் அறிவுறுத்தப்பட்டது என்றாா்.
கூட்டத்தில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் ஆ. அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, முதுநிலை மண்டல மேலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.